நா. பார்த்தசாரதி
375
“உலகத்தில் இரண்டு வகையான செல்வர்கள் இருக்கிறார்கள் என்பதை நீ அறிந்திருக்க நியாயமில்லை மணிமார்பா! தங்கள் செல்வச் செழுமைக்காக மட்டும் பெருமையும் செருக்கும் கொள்கிற செல்வர்கள் ஒருவகை; தங்கள் செழுமைக்காக மட்டுமின்றி பிறருடைய அழிவுக்கும், குறைவுக்கும் சேர்த்துப் பெருமைப்பட விரும்புகிற செல்வர்கள் ஒருவகை. இந்த இரண்டாவது வகைச் செல்வர்களுக்குத் தாங்கள் வளர்ந்து வாழ்வில் அடைகிற மனத்திருப்தியோடு பிறர் தளர்ந்து சீரழிவதைக் கண்டு கிடைக்கிற மிருகத்தனமான மகிழ்ச்சியும் அடையக் கிடைத்துக் கொண்டே இருக்கவேண்டும். இல்லாவிட்டால் மனம் நிறையாது.
“ஆனால் இந்தக் கொடுமைக்காரர்களுக்கிடையிலே ஓர் அன்பு மலரும் மலர்ந்து மணந்து கொண்டிருக்கிறது ஐயா! அந்தப் பெண் சுரமஞ்சரி உங்கள் மாணவர் இளங்குமரன் மேல் உயிரையே வைத்திருக்கிறாள். உங்கள் மாணவரோ அந்தப் பெண்ணின் பெயரை எடுத்தாலே சீறி விழுகிறார். இளங்குமரனின் இந்த ஓவியத்தை வரைந்ததற்காக அவள் எனக்குக் கொடுத்த பரிசைப் பார்த்ததாலே அவளுக்கு அவர் மேலிருக்கும் அன்பை உங்களால் புரிந்து கொள்ள முடியும். இதோ, பாருங்கள்...” என்று சொல்லிவிட்டுத் தன் மடியிலிருந்த மணிமாலையை எடுத்து நீலநாக மறவருக்கு முன் நீட்டினான் ஓவியன்.
நீலநாகர் அதைக் கையில் வாங்கவில்லை. அவ்வளவாக விரும்பிப் பார்க்கவுமில்லை. ஏதோ சிறுபிள்ளை விளையாட்டைப் பார்த்துச் சிரிப்பதுபோல் மெல்லச் சிரித்தார்.
“தம்பி! நீ உன்னுடைய கலைத்திறனைக் காட்டி அதற்குச் சன்மானம் பெற்று வாழ்கிறவன். உனக்கு எவ்வளவு அதிகப் பெறுமானமுள்ள பொருளைப் பரிசு கொடுக்கிறார்களோ, அதையே அளவுகோலாகக் கொண்டு மனிதர்களின் பண்பை அளந்து பார்க்கிறாய். நானாகவோ, இளங்குமரனாகவோ இருந்தால் இத்தகைய பரிசுப்