உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி பல்லவம் 2.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

376

மணிபல்லவம்

பொருள்களைப் பெற்றுக் கொள்ளவே இணங்கியிருக்க மாட்டோம். நம்முடைய திறமையைப் பாராட்டுகிறவர்கள் அப்படிப் பாராட்டுவதற்குத் தகுதியுடையவர்கள்தாமா என்று சிந்திப்போம். பிறரிடமிருந்து பரிசு என்று எதையாவது வாங்கிக் கொண்டால் அது காரணமாகவே அவர்களுடைய சிறிய தகுதிகளும் நமக்கு மிகப் பெரியவையாகத் தோன்றத் தொடங்குகின்றன. நடுநிலை பிறழ்ந்து நமக்குக் கொடுத்துக் கொண்டே இருப்பவர்களுக்கு வசப்பட்டு விடுகிற நம் மனம் ஏதாவது ஒரு பொருளைப் பெற்றுக்கொண்டு அதற்காக மனத்தைத் தோற்கக் கொடுப்பதைக் காட்டிலும் எதையுமே பெற்றுக் கொள்ளாமல் மனத்தை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லதென்று நாங்கள் நினைக்கிறோம்.”

அவருடைய சித்தாந்தம் மணிமார்பனுக்குப் புரியவில்லை. ஆனால் இளங்குமரனிடமிருந்த பிடிவாதமும், முரட்டுக் குணமும் யாரிடமிருந்து அவனுக்கு வந்திருக்க வேண்டுமென்று இப்போது புரிந்தது. இதே மணி மாலையை இளங்குமரன் ஒரு முறை ‘தன்னிடமிருந்து வாங்கிக் கொள்ள மறுத்ததாகச் சுரமஞ்சரி’ கூறியதும் நினைவு வந்தது.

“எனக்குப் பரிசு கொடுத்திருக்கிறாள் என்பதற்காக அந்தப் பெண் சுரமஞ்சரியை நான் புகழவில்லை ஐயா! இளங்குமரன் மேல் அவளுக்கு இருக்கும் அன்பு மெய்யானது. இல்லையானால் தன் தந்தை இளங்குமரனைத் தேடிப் பிடித்துச் சின்ற செய்ய எண்ணியிருப்பதை என்னிடம் சொல்லி, அவரை முன் எச்சரிக்கையோடு இருக்கச் செய்யுங்கள் என்று என்னை இங்கே அனுப்புவாளா?” என்று மணிமார்பன் மறுத்துக் கூறியதைக் கேட்ட பின்பும் அவர் அதை ஒப்புக் கொண்டதாகத் தெரியவில்லை.

“அப்படி இவர்கள் வந்து சிறைப்பிடித்துக் கொண்டு போகிற அளவு வாயில் விரலை வைத்தாலும் கடிக்கத் தெரியாத பருவத்துப் பிள்ளையல்ல அவன். ஒருவேளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/82&oldid=1149697" இலிருந்து மீள்விக்கப்பட்டது