378
மணிபல்லவம்
மணிமார்பா! இந்த நகரில் இலவந்திகைச் சோலையின் மதிலுக்குப் பக்கத்தில் சைன சமயத்தைச் சேர்ந்த இல்லறத் துறவிகளாகிய சாவகர்கள் தங்கும் மடம் ஒன்று இருக்கிறது. அந்த மடத்திலிருந்து பாண்டிய நாட்டிற்குப் போகிறவர்களின் கூட்டம் அநேகமாக நாள்தோறும் புறப்படும். விடிவதற்கு முன்னாலேயே உன்னை அங்கே கொண்டு போய் விட்டுவிடுகிறேன். அவர்களோடு புறப்பட்டுச் செல்வது உனக்குப் பாதுகாப்பாக இருக்கும்” என்றார் நீலநாக மறவர்.
அடுத்தநாள் போது விடிவதற்கு நாலைந்து நாழிகைகள் இருக்கும்போதே தமது வழக்கம்போல் துயில் நீங்கி எழுந்துவிட்ட அவர் மணிமார்பனையும் எழுப்பி அழைத்துக் கொண்டு இலவந்திகைச் சோலைக்குப் புறப்பட்டார். அங்கே மணிமார்பன் மதுரை செல்வதற்கு வழித்துணை கிடைத்தது.
“மறந்துவிடாதே, தம்பீ! எல்லையற்ற வாழ்க்கைக் கடலில் சந்தர்ப்ப அலைகள் மறுபடி உன்னையும், என்னையும், இளங்குமரனையும் சந்திக்கச் செய்யலாம். சந்திக்கச் செய்யாமலும் போகலாம். நீ வரைந்த இளங்குமரனின் ஓவியம் என்னிடம் இருப்பதால் அதைக் காணும் போதெல்லாம் உன் நினைவு வரும்” என்று விடைகொடுத்தார் நீலநாகர். ஓவியன் கண்ணில் நீர் நெகிழ அந்தக் கம்பீர மனிதரை நோக்கிக் கைகூப்பினான். பின்பு வழித்துணையாக வாய்த்த சாவகர்களோடு யாத்திரையைத் தொடங்கினான் மணிமார்பன்.
12. காவிரியில் கலந்த
கண்ணீர்
மணிமார்பனைச் சாவர்களின் வழித் துணையோடு மதுரைக்கு அனுப்பிவிட்டு நீலநாக மறவர் புறவீதி வழியே ஆலமுற்றத்துப் படைக்கலச் சாலைக்குத்