உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி பல்லவம் 2.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

380

மணிபல்லவம்

ஒலித்துக் கொண்டிருந்த வளையொலியும், சிலம்பொலியும் சில கணங்கள் ஒலிக்காமல் நின்றன.

“தாத்தா!” என்று மிக இனிய பெண் குரல் ஒன்று அந்த இடத்திலிருந்து கூவியழைத்தது. அவர் திரும்பி நின்று பார்த்தார். நாள் புலரும் நேரத்தின் வைகறை அழகுகளே ஒன்று சேர்ந்து ஒரு சின்னஞ்சிறு பெண்ணாகிக் குடம் நிறைய நீருடன் கை நிறைய ஏந்திக் கொண்டு நிற்பது போலத் தூக்கத்தில் சரிந்த குழல் துவள, சூழலில் சரிந்த பூவுந்துவளப் பெண்ணொருத்தி நின்றாள்.

அரைகுறை இருளில் முகம் நன்றாகத் தெரியாமல், “யார் அம்மா நீ?” என்று நின்ற இடத்திலிருந்தே வினவினார் நீலநாக மறவர்.

“நான்தான் தாத்தா வீரசோழிய வளநாடுடையாரின் மகள் முல்லை” என்று பதில் சொல்லிக் கொண்டு அவருக்கு அருகில் வந்தாள் அந்தப் பெண். குடத்துள் நீர்த்தரங்கம் குலுங்கி ஒலித்தது.

“என்ன வேண்டும் உனக்கு?”

“என் தந்தை இன்று காலை உங்களைக் காண்பதற்காகப் படைக்கலச் சாலைக்கு வரவேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தார்.”

“என்ன காரியமாகப் பார்க்க வேண்டுமோ?”

“உங்கள் படைக்கலச் சாலையில் இருக்கிறாரே அருட் செல்வ முனிவரின் வளர்ப்புப் பிள்ளை — அவரைப் பற்றி உங்களிடம் ஏதோ பேசுவதற்காக உங்களைப் பார்க்க வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தார்.”

“ஆகா! நன்றாகப் பேசலாம். நான் இப்போது ஆல முற்றத்துக்குத்தான் போய்க் கொண்டிருக்கிறேன். சிறிது நேரங்கழித்து உன் தந்தையைப் புறப்பட்டு வரச் சொல்லேன்” என்றார் நீலநாக மறவர். அவரிடமிருந்து இளங்குமரன் அப்போது எங்கிருக்கிறான் என்ற செய்தியை வரவழைத்து விடலாமென்றுதான் முல்லை அவரோடு பேச்சுக் கொடுத்தாள். ஆனால் அவருடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/86&oldid=1149701" இலிருந்து மீள்விக்கப்பட்டது