உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி பல்லவம் 2.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

381

மறுமொழிகள் அவளுக்கு ஏமாற்றத்தைத்தான் தந்தன. அவரோ ஒளி பரவுவதற்குள் திரும்பிப் போய்விடவேண்டுமென்ற அவசரத்தில் இருந்தார். கேள்வியைச் சிறிது நெருக்கமாகத் தொடுத்தால்தான் எதிர்பார்க்கிற பதில் கிடைத்தாலும் கிடைக்கலாமென்று எண்ணியவளாய், “உங்களை அமரச் செய்து இந்த வீதி வழியாக ‘அவர்’ தேரைச் செலுத்திக் கொண்டு போனபோது கூட நான் பார்த்தேன் தாத்தா” என்று சிறுகுழந்தை பேசுவதுபோல் பன்னிப் பன்னிப் பேசினாள் முல்லை.

அப்படியும் அவரிடமிருந்து அவள் எதிர்பார்த்த செய்தி வரவில்லை. அதற்குள், வாயிலில் பெண் யாருடனோ பேசுகிற குரல் கேட்டு வளநாடுடையாரே வெளியே வந்துவிட்டார். “விடிந்ததும் விடியாததுமாக யாரோடம்மா பேசிக்கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டவாறே வெளியே வந்த தந்தையை எதிர் கொண்டு ஓடிச் சென்று, “இதோ ஆலமுற்றத்துத் தாத்தா வந்திருக்கிறார் அப்பா” என்று உற்சாகமாகக் கூறினாள் முல்லை. ‘ஆலமுற்றத்துத் தாத்தா’ என்று தங்கை கூறிய குரல் கேட்டுக் கதக்கண்ணனும் உள்ளேயிருந்து விரைந்து வந்தான். வராதவர் வந்திருப்பதைக் கேள்விப்பட்ட ஆர்வம் அவனுக்கு.

அதன்பின் நீலநாக மறவரால் இத்தனை பேரையும் மீறிக் கொண்டு உடனே அங்கிருந்து போக முடியவில்லை.

“இளங்குமரனை நீங்கள் திருநாங்கூருக்கு அழைத்துக் கொண்டு போயிருப்பதாகக் கதக்கண்ணன் படைக்கலச் சாலையிலிருந்து தெரிந்து கொண்டு வந்து சொன்னான். இன்று நீங்கள் வரும்போது உங்களோடு அவனையும் திரும்ப அழைத்து வந்து விட்டீர்களல்லவா? நேற்றிலிருந்து இந்தப் பெண் முல்லைக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. அந்தப் பிள்ளையோடு வம்புப் பேச்சுப் பேசி அவனைச் சண்டைக்கு இழுப்பது இவளுக்கு விருப்பமான பொழுதுபோக்கு. இப்போது சில நாட்களாக அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/87&oldid=1149702" இலிருந்து மீள்விக்கப்பட்டது