உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி பல்லவம் 2.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

382

மணிபல்லவம்

இந்தப் பக்கமே வரவில்லை. அதனால் முல்லைக்கு அவனிடம் பெரிய கோபமே மூண்டிருக்கிறது” என்று வளநாடுடையார் தம் ஆவல் மேலிட்டால் பேசிக் கொண்டேயிருந்தார்.

நீலநாக மறவர் அமைதியாகவும், அழுத்தமாகவும் இருந்தார். அவரிடமிருந்து வார்த்தை பெயரவில்லை. அவர் என்ன பதில் கூறப் போகிறாரென்று அறிவதற்காகவே முல்லையும் அங்கிருந்து போகாமல் ஒரமாக ஒதுங்கி நின்று கொண்டிருந்தாள். வளநாடுடையார் விடாமல் மேலும் பேச்சை வளர்த்தார்.

“திருநாங்கூருக்குப் போயிருக்கிறீர்கள் என்று கேள்விப்பட்டவுடன் உங்கள் ஆசிரியர் பிரானாகிய பூம்பொழில் நம்பியடிகளின் நினைவுதான் எனக்கு உண்டாயிற்று. நீங்களும், இளங்குமரனும் அடிகளைக் கண்டு வணங்கி விட்டுத் திரும்பியிருப்பீர்கள்.”

“அடிகளைக் காண்பதற்குத்தான் போயிருந்தோம். ஆனால் திரும்பியது நான் மட்டும்தான் வளநாடுடையாரே!”

“ஏன்? இளங்குமரன் வரவில்லையா?”

“இல்லை! அவன் இன்னும் சிறிது காலத்திற்கு எங்கும் வரமாட்டான். நாங்கூர் அடிகள் தமது ஞானத்தைப் பயிர் செய்யும் விளைநிலமாக அவனை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.”

என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அப்படியே திகைத்துப் போய் இருந்தார் வளநாடுடையார். பிள்ளைப் பருவத்திலிருந்து வேலும், வாளும் சுமந்து வீரனாகத் தன்னோடு தோழமை கொண்டு திரிந்த இளங்குமரன் வேறு வழிக்குத் திரும்பிவிட்டான் என்பதைக் கேட்டதும் கதக்கண்ணனுக்கு என்னவோ போலிருந்தது. ‘எந்தத் துறையிலும் எல்லை மீறிய ஆழத்துக்கு உணர்வு பூண்டிருப்பவர்கள் விரைவில் இப்படி மாறி விடுவார்கள் போலும்’ என்று எண்ணினான் அவன். முரட்டுப் பிள்ளையாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/88&oldid=1149703" இலிருந்து மீள்விக்கப்பட்டது