உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி பல்லவம் 2.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

383

அடக்க முடியாத காட்டாறு போலக் காவிரிப் பூம்பட்டினத்து வீதிகளில் தன்னையொத்த இளைஞர்களுடன் சுற்றித் திரிந்த பழைய இளங்குமரனை நினைத்தான். கடைசியில் நீராட்டு விழாவுக்குப் போன தினத்தன்று உலக அறவியிலும், இலஞ்சி மன்றத்திலும் மனமுருகி நின்ற இளங்குமரனை நினைத்தான். ‘என்னைப் போல் அகன்று போகும் உணர்ச்சி கொண்டவர் எப்படியாவது வாழ்ந்து கொண்டே இருப்போம். ஆனால் இளங்குமரனைப் போல் ஆழ்ந்து போகும் உணர்ச்சி கொண்டவர்கள் ‘இப்படித்தான் இருக்க வேண்டும்’ என்ற எண்ணத்தால் தாங்கள் வாழும் உயரத்தை மேலே மேலே ஓங்கச் செய்யாமல் இருக்க மாட்டார்கள் என்று தெரிகிறது’ என நினைத்தான் கதக்கண்ணன்.

‘இளங்குமரன் சுரமஞ்சரியின் மாளிகைக்குப் போயிருப்பானோ?’ என்று நினைத்து நிம்மதியிழந்திருந்த முல்லை இப்போது இதைக்கேட்டு அதிர்ச்சியே அடைந்தாள்.

“அவன் திருநாங்கூருக்குப் போனது உங்களுக்கெல்லாம் மகிழ்ச்சி தரவில்லையென்று தோன்றுகிறது” என்று அவர்களிருந்த மெளன நிலையைக் கண்டு கூறினார் நீலநாகர்.

“இங்கே அடிக்கடி வந்துபோய்ப் பழகிக் கொண்டிருந்த பிள்ளையைத் திடீரென்று இனிமேல் இந்தப் பக்கம் காண முடியாதென அறியும்போது மனத்திற்குத் துன்பமாக இருக்கிறது. வேறு ஒன்றுமில்லை.”

சற்றே உடைந்து தளர்ந்த குரலில் இவ்வாறு கூறினார் வளநாடுடையார்.

“எனக்கு நேரமாகிறது. நான் புறப்படுகிறேன். முடிந்தால் மாலையில் ஆலமுற்றத்துப் பக்கம் வாருங்கள். பேசலாம்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார் நீலநாகர்.

வளநாடுடையாரும், நீலநாக மறவரும் வேண்டிய உறவும் நெருக்கமும் உள்ளவர்களானாலும் மனத்தினாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/89&oldid=1149704" இலிருந்து மீள்விக்கப்பட்டது