நா. பார்த்தசாரதி
303
“இவை எழுத்திலக்கணச் சுவடிகள். இவை சொல் இலக்கணச் சுவடிகள். இவை பொருளிலக்கணச் சுவடிகள், இவை செய்யுளிலக்கணச் சுவடிகள். இதோ, இவையெல்லாம் தர்க்கம், இவையெல்லாம் சமய நூல்கள். இவை வைத்திய நூல்கள். இவை அலங்கார நூல்கள்” என்று ஒவ்வோர் அடுக்காகக் காண்பித்துச் சொல்லிக் கொண்டே போனார் அடிகள்.
அவர் முகத்தில் அவற்றையெல்லாம் கற்பிக்கத் தகுதியான மாணவன் கிடைத்துவிட்ட உற்சாகம் தெரிந்தது.
அப்போது அந்தக் கிரந்த சாலையில் தூபப்புகை நறுமண அலைகளைப் பரவச் செய்து கொண்டிருந்தது. நெய்யிட்டு ஏற்றிய தீபங்களின் ஒளி அங்கங்கே பூத்திருந்தது. தணிவாகக் கூரை வேய்ந்திருந்த சாலையாதலால் அங்கே எப்போதும் தீபஒளி தேவையாயிருந்தது போலும்.
“இவ்வளவு சுவடிகளுக்கும் மீறி அறிவைப் பற்றிய சிந்தனைத் தலைமுறை இன்னும் வளர்ந்து கொண்டிருக்கிறது. தம்பி, இவ்வளவையும் எந்தக் காலத்தில் கற்று முடிப்பது? என்று நீ மலைப்பு அடையாதே தைரியத்தை அடைவதற்காகத்தான் கல்வி, துணிந்து கற்க வேண்டும். கற்றுத் துணிய வேண்டும்.”
“அந்தத் துணிவைத் தாங்கள்தான் எளியேனுக்குத் தந்தருள வேண்டும்” என்று கூறியபடியே அவருடைய கால்களில் வீழ்ந்து வணங்கினான் இளங்குமரன்.
‘இந்தப் பாதங்களை விட்டுவிடாதே! இவற்றை நன்றாகப் பற்றிக் கொள்’ என்று போகும்போது நீலநாக மறவர் கூறிய சொற்களை இப்போதும் நினைத்துக் கொண்டான் அவன்.
அவனைத் தம் கைகளாலேயே எழுப்பி நிறுத்தி, “இந்தா! இதைப் பெற்றுக்கொள்” என்று முதற்சுவடியை அளித்தார் அடிகள்.