பக்கம்:மணி பல்லவம் 2.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

384

மணிபல்லவம்

நோக்கங்களாலும் அடிப்படை வேறுபாடுடையவர்கள். வளநாடுடையார் வீரருக்குள் வீரராக மட்டும் வளர்ந்து பெருமை பெற்றவர். நீலநாகரோ வீரருக்குள் மாவீரராகவும் துறவியாகவும் உயர்ந்தவர். நாங்கூர் அடிகளை அடைந்தது இளங்குமரனின் நல்ல காலம் என்று அவர் நினைத்ததைப் போல் வளநாடுடையாராலோ, கதக்கண்ணனாலோ, முல்லையாலோ நினைக்க முடியாததற்கு இவர்கள் இயல்பான மானிட நிலைகளைக் கடந்து சிந்திக்க முடியாதவர்களாக இருந்ததுதான் காரணம்.

‘இந்த மனிதர் என்னிடம் ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் இளங்குமரனைத் திருநாங்கூர் பூம்பொழிலிற் கொண்டு போய்ச் சேர்த்து விட்டாரே சோழ நாட்டிலேயே வலிமைமிக்க வீரன் என்று பேர் வாங்கும்படி அவனை ஆக்கி விடவேண்டுமென்று நான் கனவு கண்டதெல்லாம் இனி வீணாக வேண்டியதுதானா? வருகிற புத்த பெளர்ணமியன்று அவனை மணிபல்லவத்துக்கு அழைத்து வருவதாக அருட் செல்வரிடம் நான் வாக்களித்திருப்பது என்ன ஆவது? என் பெண்ணை அவனுக்கு மணம் செய்து கொடுக்க எண்ணியிருக்கும் எண்ணம் என்ன ஆவது?’ என்று மனத்துக்குள் நினைத்துக் குழப்பமடைந்து கொண்டிருந்தார் வளநாடுடையார்.

முல்லையை அவள் நின்று கொண்டிருந்த இடத்தில் காணாததால் கதக்கண்ணன் வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்துக்குச் சென்று தேடலானான். புற வீதியின் பின்னால் மரங்களடர்ந்த வனத்தின் நடுவே காவிரியிலிருந்து பிரிந்து வரும் வாய்க்கால் ஒன்று உண்டு.

முல்லையைக் கதக்கண்ணன் தேடிச் சென்றபோது நன்றாக விடிந்துவிட்டது. அவள் காவிரி வாய்க்காலின் கரைமேல் குடத்தோடு அமர்ந்து தனிமையில் மெல்ல அழுது கொண்டிருந்ததைக் கண்டான் அவன். தங்கையின் நிலை அவனுக்குப் புரிந்தது.

“எதற்காக அழுகிறாய், முல்லை?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/90&oldid=1149705" இலிருந்து மீள்விக்கப்பட்டது