பக்கம்:மணி பல்லவம் 3.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

556

மணிபல்லவம்


எண்ணித் தேர்ச் சக்கரங்களைவிட வேகமாக உருண்டு கொண்டிருக்கும் பதறிய நினைவுகளோடு போய்க் கொண் டிருந்தார் அவர். இந்தச் சந்தேகங்களையும் பதற்றங் களையும் தேரில் உடன் வந்து கொண்டிருந்த நகைவேழம் பரிடம் மனம் விட்டுப் பேசலாம் என்றால் சற்றுமுன் அவருக்கு ஏற்றபட்டிருந்த பிணக்கினால் அவர் பேசு வதற்கே விருப்பமில்லாதவர் போல வேறுபுறம் பார்த்துக் கொண்டிருந்தார். பல்லக்கின் பின்புறச் சட்டத்தில் பணிவாக முழந்தாளிட்டு உட்கார்ந்து கொண்டிருந்த யவன ஊழியனிடம் பேசலாமென்று மனம் தவித்தாலும் இதையெல்லாம் அவனைப் போன்ற ஊழியனிடம் பேசுவது கெளரவக் குறைவு என்ற எண்ணம் குறுக் கிட்டுத் தடுத்தது. எல்லா ஆத்திரத்தையும் சேர்த்துத் தேரோட்டியிடம் காண்பித்தார் அவர். "இதென்ன ? ஆமை ஊர்வதுபோல் தேரைச் செலுத்துகிறாயே, குதிரை களை விரட்டு, என் பொறுமையைச் சோதிக்காதே." தேரோட்டி சாட்டையைச் சொடுக்கினான். குதிரைகள் தாவிப் பாய்ந்தன. நாளங்காடி நெருங்க நெருங்கப் பயத்தினால் அவர் நெஞ்சு வேகமாக அடித்துக் கொண்டது. அவர்களுடைய தேர் நாளங் காடியை அடைந்து குறிப்பிட்ட இடத்தினை அணுகி நின்றபோது ஆத்திரத்தின் பிரதிபிம்பமாகப் பெண்மை யின் ஊழிக் காலம் போல சுரமஞ்சரி அங்கிருந்த கோலத்தை அவரே தம் கண்களால் கண்டு அஞ்சினார். அப்போது அவளுக்கு முன்னால் கீழே இறங்கிப்போய் நிற்க வேண்டுமென்று நினைப்பதற்கே பயமாக இருந்தது. அவருக்கு. தலைவிரி கோலமாக நகைகளையெல்லாம் கழற்றி எறிந்துவிட்டுத் திமிறிக்கொண்டு ஓட முயலும் சுரமஞ்சரியை வானவல்லியும், வசந்தமாலையும் பக்கத்துக்குப் பக்கம் கைகளைப் பற்றித் தடுத்துக் கொண்டு நின்றார்கள். பல்லக்கிலும் தரையிலுமாக அவள் கழற்றிச் சிதறிய அணிகலன்கள் கிடந்தன. வெறி கொண்டவள் போல எதையோ சொல்லிக் கூக் குரலிட்டுக் கொண்டிருந்தாள் சுரமஞ்சரி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_3.pdf/106&oldid=1144488" இலிருந்து மீள்விக்கப்பட்டது