பக்கம்:மணி பல்லவம் 3.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

485


தூக்கி ஊன்றுகோலைக் கையில் எடுத்துக் கொடுத்துச் சிறிது தொலைவு தழுவினாற் போலத் தாங்கி நடத்திக் கொண்டு போய், நெருக்கமில்லாத வழியில் அனுப்பி விட்டுத் திரும்பினான் இளங்குமரன். திரும்புமுன் அந்த முதுமகள் கூறிய நன்றியுரை இன்னும் தன் செவிகளில் ஒலித்துக் கொண்டேயிருப்பதாக உணர்ந்தான் இளங் குமரன.

"பழுத்துத் தளர்ந்த பாகற் பழம்போல் இமைகள் தொங்கிப் பார்வையை மறைக்கிறதப்பா. நீ யாரா யிருந்தாலும் உன்னை ஒருமுறை கண்குளிரப் பார்க்க வேண்டுமென்று ஆசையாயிருக்கிறது. ஆனால் பார்க்க முடியவில்லை. என்னால் உன்னுடைய முகத்தைப் பார்க்க முடியவில்லையானாலும் அகத்தைப் பார்க்க முடிகிறது. பிறர்மேல் கருணை கொள்வதையே பெரு நிதியாகக் கருதும் நெஞ்சுக்கு உரியவன் எப்படி இருக்க முடியுமென்று நினைத்து நினைத்து-அந்த நினைப்பு களையே கோடுகளாக இழுத்து என் நெஞ்சில் உன் உருவத்தை எழுதிப் பார்க்கிறேன். அப்படி எழுதிப் பார்க்கும்போது சாந்தம் திகழும் கண்களை அகல விழித்து அவற்றில் பெருகும் கருணையையே அழகாகக் கொண்டும் நித்திய செளந்தரியத்தின் எல்லைகளாய் இரண்டு கைகளை நீட்டிக் கொண்டும் நீ உருவாகி நிற்கிறாய்!” என்று அந்த முதுமகள் நாத் தழுதழுக்கச் சொல்லியபோது அவளுடைய சொற்களில் மனமும் உணர்வுகளும் குழைந்து பரிவு பெருக நின்றான் இளங் குமரன். அவளுக்கு ஏதாவது பதில் சொல்ல வேண்டு மென்று அவன் நினைத்ததும் சொல்ல வரவில்லை. அவள் பேசியதைக் கேட்ட பின்பு அவனுக்குப் பேசவே வரவில்லை. .

அந்த முதுமகள் நிறைய கற்றவளாய் இருக்க வேண்டுமென்று அவளுடைய சொற்களிலிருந்து புரிந்தது. அவளுடைய சொற்களுக்குப் பின் தன்னுடைய சொல் லாமையே-மெளனமே மதிப்பு நிறைந்ததென்று எண்ணிக் கொண்டு யானை நின்ற இடத்துக்குத் திரும்பி நடந்தான் அவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_3.pdf/35&oldid=1144055" இலிருந்து மீள்விக்கப்பட்டது