பக்கம்:மணி பல்லவம் 3.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 455

எது வெற்றி? எது தோல்வி: ஓர் எல்லையில் நின்று பார்க்கும்போது வெற்றியாகத் தெரிவது, மற்றோர் எல்லையில் நின்று பார்த்தால் தோல்வியாகத் தெரி கிறதே! மனிதர்களின் நியதிப்படி பார்த்தால் தங்கள் மனம் நினைத்தது நினைத்தவாறே, விரும்பியது விரும்பிய வண்ணமே விளைந்தால் அது வெற்றி, அல்லாதது தோல்வி. ஒரு விளைவை வெற்றியாகவும் தோல்வியாகவும் எடுத்துக் கொள்வது அந்த விளைவை அனுபவிக்கும் மனப்பக்குவத்தைப் பொறுத்ததுதான்.

காவிரிப்பூம்பட்டினத்தை நெருங்க நெருங்கச் சாலைகளில் கூட்டம் நிறைந்திருந்தது. நீலநாக மறவர் தேரை மெல்லச் செலுத்தினார். தீபாலங்காரங்களும் வாண வேடிக்கைகளுமாக எதிரே மாபெரும் கோநகரம் தெரிந்தது. கடல் அலைகளின் ஒசையோடு இந்திரவிழா ஆரவாரங்களும் கேட்டன. நகரத்தின் ஒளி அலங் காரங்கள் நீர்ப்பரப்பில் பிரதிபலித்து மேலும் அழகு உண்டாக்கிக் கொண்டிருந்தன. இனிமையான இசை ஒலிகள் காற்றில் மிதந்து வந்தன. பூம்புகாரின் எல்லைக் குத் தேர் வந்ததும் இளங்குமரன் தன் மனத்தில் ஒரு சங்கல்பம் செய்யத் தொடங்கினான்:

"இந்த ஆரவாரங்களுக்கு நடுவே என் அறிவைக் காப்பாற்று. இந்த வேகத்துக்கு நடுவே எனக்கு நிதானத்தைக் கொடு. இந்தக் கூட்டத்துக்கு நடுவே என்னுடைய தியானத்துக்குத் தனிமையைக் கொடு. தேன் பாத்திரத்துள் சுவைப்பதற்கு இறங்கும் வண்டு அதனுள்ளேயே மூழ்கி மாண்டு போவது போல் கண்ணுக்கினியனவும் செவிக்கினியனவும் நாவுக்கினி யனவும் வாசனைக்கு இனியனவும் ஆகிய சுவை வெள் ளங்களில் மூழ்கி அழிந்து விடாமல் நீந்திக் கரையேறுகிற ஆற்றலை எனக்குக் கொடு. நினைவின் அருவங்களாகிய கனவுகளிலிருந்து என் மனம் விலகி நிற்கட்டும். மெய் யொளியை மறைக்கும் பொய்யொளிகளை என் கண்கள் காணக் கூசட்டும். வெற்றுரைகளைக் கேட்காமல் என் செவிகள் மூடிக் கொள்ளட்டும். வெற்றுரைகளைப் பேசாமல் என் நா அடங்கட்டும்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_3.pdf/5&oldid=1144020" இலிருந்து மீள்விக்கப்பட்டது