பக்கம்:மணி பல்லவம் 3.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

500

மணிபல்லவம்


உன்னைக் கொல்ல நினைத்துத் திரிந்து கொண்டி ருப்பவர்கள், எல்லாரையும் எண்ணிப் பின் தொடர்ந் தேன். நீ உன்னுடைய அறிவுக்குப் பகைவர்களாக எதிரே வந்து கொடி நடப் போகிறவர்களை மட்டும் எதிர்பார்த்து வந்தாய். நானோ உன்னுடைய உயிருக்குப் பகைவர்களை எதிர்பார்த்தும், எதிர்த்துப் பார்க்கவும் வந்தேன். நீ பிரமவாதியைச் சொற்களால் மடக்கி வென்றதையும் சாருவாகனனின் செருக்கை வேரோடு சாய்த்து வென்றதையும், 'கருணைதான் செல்வம் என்று அந்தப் பல்லக்குச் செல்லக் குமரிக்குப் பதில் சொல்லிவிட்டுக் கீழே விழுந்த முதுமகளைத் துரக்கி வழியனுப்பியதையும் பார்த்துப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்த நான் கடைசியில் இந்தக் கபாலிகையின் பொய்யான வேண்டுகோளுக்கு நீ செவி சாய்த்தபோது தான் மகிழ்வதை நிறுத்திக்கொண்டு சந்தேகப்படத் தொடங்கினேன். இவள் உன்னிடம் பேசிய விதமும், அந்த அகாலத்தில் வன்னி மன்றத்துக்கு அழைத்த முறையும் எனக்குச் சந்தேகமூட்டின. நீ இவளோடு புறப்பட்டால் நானும் பின்தொடர்வதென்று முடிவு செய்தேன். அப்படியே நடந்தது.”

"ஐயா! எதிர்மறையாக எண்ணிப் பார்ப்பதற்கும் சந்தேகப்படுவதற்கும் எனக்குத் தோன்றவே இல்லையே? கையைக் கூப்பி வணங்கினாற் போன்ற மதிப்போடு இவள் கூப்பிட்டவுடனே மெய்யென்று நம்பிவிட்டேன்." ஞானம் உலகத்தை நம்பிக்கை மயமாகவும் கருணை மயமாகவும் பார்ப்பதற்கு உன்னைப் பழக்கியிருப்பது நல்லதுதான். ஆனால் கையை ஓங்கிக்கொண்டு அறைய வருகிற பகைவர்களைக் காட்டிலும் கைகூப்பிக் கொண்டு மனம் கூசாமல் வருகிற பகைவர்கள் பயங்கர மானவர்கள். உலகத்தில் கையைக் கூப்பிக்கொண்டு நண்பர்போல் வரும் பகைவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். தொழுத கை உள்ளும் படை ஒடுங்கும் ஒன்னார் அழுத கண்ணிரும் அனைத்து என்று படித் திருப்பாயே ?” -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_3.pdf/50&oldid=1144070" இலிருந்து மீள்விக்கப்பட்டது