பக்கம்:மணி பல்லவம் 3.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

501


"படித்திருக்கிறேன். ஆனால் அது அரச தந்திரி களுக்கும் மதி அமைச்சர்களுக்கும் சொன்ன உண்மை அல்லவா ?”

"ஒவ்வொரு மனமும் ஒர் அரசுதான். அது அரச தந்திரமும் அமைச்சும் இருந்தால் மனத்தையும் மனோ ராச்சியத்தையும் அற்புதமாக ஆளலாம்.” !

"எல்லாவற்றையும் விட வேண்டுமென்று நான் கற்று வந்திருக்க, எல்லாவற்றையும் ஆள்வதற்கு நீங்கள் வழி சொல்லிக் கொடுக்கிறீர்கள் ஐயா !” என்றான் இளங்குமரன்.

இதைக்கேட்டு நீலநாக மறவர் புன்னகை புரிந்தார். “ஒன்றைப் பற்றிக் கொள்ள முடியாமல் மற் றொன்றை விட முடியுமா? இளங்குமரா? கவலையில் லாமல் உன்னுடைய அறிவுப் போராட்டத்தை நடத்து. அறிவுடையவனுக்கு அந்த அறிவே பெரிய அரண். வேறு பாதுகாப்பு அவசியமில்லை. ஆனால் கண்ணுக்கு அழகாயிருக்கிறதென்று மற்றவர்கள் புகழும் மையைக் கண்ணே கண்டு அநுபவிக்க முடியாதது போல அறிஞனுக்கும் மயக்கங்கள் வருவதுண்டு. இதுபோல் உயிர் போகிற ஆபத்துக்களும் அப்படி மயங்கி வரும். இன்று நீ இந்தக் கபாலிகையிடம் சிக்கிக்கொண்டதற்கும் அப்படிப் பிறழ்ந்த அநுமானம்தான் காரணம்! இந்த நகரத்து எல்லைக்குள் நான் ஒருவன் உயிரோடு இருக்கிற வரை உன்னை யாரும் எதுவும் செய்துவிட முடியாது. வா, போகலாம்” என்று அவனை அழைத்துக் கொண்டு புறப்பட்டார் நீலநாக மறவர். இருவரும் யானைமேல் ஏறிக்கொண்டு படைக்கலச் சாலைக்குப் போய்ச் சேர்ந்தார்கள். அப்போது பின்னிரவு தொடங்கும் நேரமாகியிருந்தது. மேகங்களே இல்லாத தெளிந்த வானத்தில் ஆலமுற்றத்துக் கோவிலுக்கு அப்பால் முழுநிலா அற்புதமாகத் தோன்றிக் கொண்டிருந்தது. வானில் ஊர்ந்து திரிந்து வந்து அலுத்ததுபோல் அந்தப் பின்னிரவு நிலாவில் சற்றே ஒளிமங்கியுமிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_3.pdf/51&oldid=1144071" இலிருந்து மீள்விக்கப்பட்டது