பக்கம்:மணி பல்லவம் 3.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

508

மணிபல்லவம்


செல்வருக்குச் சர்ப்பங்களாகவே தோன்றின. நெருப்பில் காட்டிய தருப்பைப் புல்லின் அழலோடிய துணிகளைப் போல் செக்கச் செவேலெனப் பிளந்த நாக்குகள் நெளிய ஒரு படம் புற்றிலிருந்து வெளி வந்து தெரிந்தது. பெரு நிதிச் செல்வர் பயந்து பதுங்கி நகைவேழம்பரைத் தழுவிக் கட்டிக்கொள்வதுபோல அவரோடு அவராக ஒண்டினார். சாதிக்காயின் மேல் நரம்போடிப் படர்ந்த சாதிப் பத்திரிபோல் நச்சு நாவுகள் நெளியப் புற்றுத் துளையிலிருந்து பொங்கி ஒழுகிப் பெருகி வழியும் கருமையாய் ஒரு பெரிய கருநாகம் வெளிவந்தது. மகுடியை ஒரு கையாலேயே வாசித்துக் கொண்டு மற்றொரு கையால் சர்ப்பத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் வாய்ந்த வேரைப் பிடித்தான் பிடாரன். தரையில் அவனைச் சுற்றிலும் பாம்பைச் சிறைப் பிடித்து அடைத்துக் கொண்டு போகும் பேழைகள் கிடந்தன. பயத்தின் மிகுதியால் நகைவேழம்பரையும் இழுத்துக் கொண்டு பின்னுக்கு நகர்ந்தார் பெருநிதிச் செல்வர்.

கூடை போலப் பிரம்பினால் நெருக்கமாய்ப் பின்னிய வட்டப் பேழையில் சாமர்த்தியமாக அந்தச் சர்ப்பத்தை அடைத்து மூடி அதன்மேலே சிறு கல் ஒன்றையும் தூக்கி வைத்தான் பிடாரன். பின்பு விலகி நிற்கும்படி அவர்களுக்குச் சொல்லிவிட்டு மேலும் மகுடி ஊதலானான். புற்றில் இன்னொரு படம் தெரிந்தது. தொடர்ந்து வேறு வேறாக அடுத்த இரண்டு துவாரங் களிலும் படங்கள் தெரிந்தன. பிடாரன் சாதுரியமாய் வேலை செய்தான். அவனிடம் மீதமிருந்த பேழைகளும் நிரம்பின. கிடைத்த பாம்புகளையெல்லாம் சிறைப் படுத்திக்கொண்டு அவன் மகுடியை நிறுத்திவிட்டு எழுந்தான். நகைவேழம்பர் அவனைப்பற்றி அவனிடமே விசாரித்தார். இந்திர விழாவில் வேடிக்கை விளை யாட்டுக்கள் செய்து பாம்பாட்டிக் காட்ட வந்திருப் பதாகவும் அது தன் தொழில் என்றும் அவன் சொன்னான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_3.pdf/58&oldid=1144395" இலிருந்து மீள்விக்கப்பட்டது