பக்கம்:மணி பல்லவம் 3.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

535


களைச் சொல்லும்போதும் கடுமையைத் தவிர்த்து விரதம் காக்கிறவர்களான சான்றோர்களின் சாயலை இந்தச் சுந்தர இளைஞரிடம் காண்கிறேன்" என்று இளங் குமரனைப் புகழ்ந்து சாங்கியன் இந்த வார்த்தைகளைக் கூறியபோது ஆகா! ஆகா! என்ற குரல்கள் சுற்றியிருந் தவர்களிடமிருந்து உருக்கமாக எழுந்து ஒலித்தன!

கண்களில் விழிகள் சொருகுவதும், திறப்பதுமாக இளங்குமரன் நீலநாக மறவரின் மார்பில் முன்னிலும் தளர்ந்து சாய்ந்தான். உயரமும் பரமனும் இறுகி வைரம் பாய்ந்த அந்த முரட்டு உடலில் ஒளிமயமான இளங் குமரன் சரிந்த காட்சி மலை முகட்டில் மின்னல் சரிந்து நெளிவது போல் தோன்றியது.

"ஐயோ பசி மயக்கம் போலிருக்கிறது” என்று பக்கத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் பதறினார்கள். "விலகி நில்லுங்கள். காற்றுப் பட்டாலே தெளிவு வரும்" என்றார் நீலநாகர். கூட்டம் விலகியது. காற்று வந்தது. ஆனால் தெளிவு வரவில்லை. அப்போது தற்செயலாக பூத சதுக்கத்தில் படையலிடுவதற்குத் தன் மகள் முல்லையோடு வந்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த வீரசோழிய வளநாடுடையார் யாரிடமோ அரைகுறை யாக இந்தச் செய்தியைக் கேள்வியுற்றுப் பதறிப் போய் ஓடிவந்தார். அவரோடு அவர் மகள் முல்லையும் வந்தாள். கேள்விப்பட்ட செய்தி அரைகுறையானது என்றாலும் மனத்தில் சந்தேகங்களுடனும்,துடிப்புடனும் பறந்து பதறித் தவித்துக் கொண்டே வந்திருந்தார்கள் முல்லையும் வளநாடுடையாரும். இதற்குள் கூட்டத்தில் யாரோ ஒருவர் பக்கத்தில் இருந்த ஒரு முதிய முனிவரிடமிருந்து தண்ணிர்க் கமண்டலத்தை வாங்கி வந்து இளங்குமரன் முகத்தில் தெளித்தார். பொற் பேழையில் வெண்முத்துக்களாக நீர்த்துளிகள் அந்த நெற்றியில் உருண்டன. அதில் சில துளிகள் காயம்பட்ட இடத்து இரத்தத்தைக் கலந்துகொண்டு மாணிக்கங் களாகவும் உருண்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_3.pdf/85&oldid=1144446" இலிருந்து மீள்விக்கப்பட்டது