பக்கம்:மணி பல்லவம் 3.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

547


நீக்குவது மானபங்கம் செய்வதற்கு ஒப்பானது, அகத்தியரும், தொல்காப்பியரும், திருவள்ளுவரும் எந்த எழுத்துக்களைத் தங்கள் தெய்வக் கைகளால் எழுத் தாணி பிடித்து எழுதினார்களோ அந்த எழுத்துக்கள் கண்ணில் தெரிவதாலேயே இன்றும் என் கண்கள் சூரிய ஒளியில் குளித்ததுபோல் புனிதமடைகின்றன. இந்த நகரின் ஆலமுற்றத்துக் கோவிலில் இருக்கிற தெய்வ பிம்பம் எப்படிப் பல ஆயிரம் ஆண்டுகளாக வணங்கப் பட்டு வணங்கப்பட்டு ஒவ்வொரு தலைமுற்ையின் பக்தியையும் வணக்கத்தையும் ஏற்றுத் தாங்கிக் கொண்டு தன் தெய்வ சக்தியை வளர்த்துக் கொண்டிருக்கிறதோ, அப்படியே தமிழும் பல கோடித் தலைமுறைகளின் பழக்கத்தில் எழுத்தும் சொல்லுமாக வணங்கப்பட்டு, வணங்கப்பட்டு மந்திரமாக நிறைமொழியாக வளர்ந்து நிற்கிறது! அதன் எழுத்துக்களை மாற்றலாமென்று நினைப்பதே பல தலைமுறைகளாக வணங்கப்பட்டு வரும் தெய்வ பிம்பத்தைக் கோவிலுக்குள்ளிலிருந்து வெளியே எடுத்து எறிய நினைப்பதற்கு ஒப்பாகும்.”

இளங்குமரன் எவ்வளவோ சான்றாண்மையையும் சம்சித்தத்துவத்தையும் பெற்றிருந்தும் அந்த வட தேசத்துப் புலவரின் இந்தக் கேள்விக்கு இப்படி மறு மொழி கூறியபோது சற்றே கண்கள் சிவந்து முகம் சிவந்து உதடுகள் துடித்திட உணர்ச்சிவசப்பட்டு

விட்டான். -

'கோபப்படாதே குழந்தாய்! வாதம் செய்கிறவன் சுயமாக உணர்ச்சிவயப்பட்டால் அந்தக் கணமே வாதத் துக்குரிய விஷயம் உணர்ச்சியிழந்து போகும் என்பது தருக்கத்தின் முறைகளில் ஒன்றல்லவா? வாதி தன்பலம் காட்டினால் வாதம் பலமில்லாதது என்றாகிவிடும். இப்போது உன்னை வேறொரு கேள்வி கேட்கிறேன். இதிகாச நாயகர்களாகிய இராமன், தருமன், கண்ணன், இவர்களைக் காவியக் குணங்களுக்காக வணங்கு கிறாயா? அற்புதச் செயல்களைச் செய்தவர்கள் என்பதற்காக வணங்குகிறாயா?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_3.pdf/97&oldid=1144469" இலிருந்து மீள்விக்கப்பட்டது