பக்கம்:மணி பல்லவம் 4.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

714

மணிபல்லவம்

புலப்பட்ட சோக அழகையும், அந்தக் கலைஞனுடைய குழலிசை சாட்சியாய் நின்று பேசுவது போல் தோன்றியது சுரமஞ்சரிக்கு. மாடத்தின் உட்புறம் தூப கலசங்களில் நெருப்பிட்டு அகில் துரவிக்கொண்டிருந்தாள் வசந்தமாலை. அந்த நறுமணப் புகைச்சுருள்களும் காற்றில் கலந்து வந்தன. முல்லையும் மல்லிகையுமாகத் தான் சூடிக்கொள்ள வேண்டும் என்று கொடுத்தனுப்பப்பட்டிருந்த பூக்களைச் சூடிக்கொள்ளும் விருப்பமில்லாமல் அப்படியே மஞ்சத்தின் ஒரு மூலையில் வீசி எறிந்திருந்தாள் அவள். அந்தப் பூக்களின் நறுமணமும் எழுந்து பரவிற்று இப்போது.

போர்க்களத்தில் நிராயுதபாணியாக நிற்கும் இளம் பருவத்து வீரனைப் பல ஆயுதங்களோடு பல முரட்டு எதிரிகள் ஒன்று சேர்ந்துகொண்டு தாக்குவதுபோல் அந்த இசையின் சோக இனிமையும், மாலையின் அந்தி மயக்கமும், பூக்களும் அகிலும் பிறப்பித்த நறுமணமும், சொந்த மனத்தின் பசிகளும் ஒன்றுசேர்ந்து தன்னைத் துன்புறுத்துவதை அவள் உணர்ந்தாள், தவித்தாள், பின்பு உருகினாள்.

அப்படியே அந்த மாடத்தின் கோடியில் அது முடியும் இடத்திலிருந்து பறந்துபோய் அதற்கு அப்பால் உள்ள உலகத்தில் தன் மனம் விரும்புகிற ஓர் இடத்தில் நிரந்தரமாகத் தங்கிவிட வேண்டும் போல் இருந்தது அவளுக்கு. பேதைப் பருவம் முடிந்து நினைவு தெரிந்த பெண்ணாய் வளர்ந்துவிட்ட பின் தன் மனத்தில் அழுத்தமாய் ஏற்பட்டிருந்த பொதுவான கர்வமும், செல்வச் செருக்கும், அழகுத் திமிரும் இன்று படிப்படியாகக் குறைந்து, ‘தானும்கூட ஆசைப்பட்டு நிறை வேற்றிக்கொள்ள வேண்டிய குறை ஒன்று உண்டு’ என்று ஏங்குகிற அளவுக்குத் தன் மனம் தாழ்ந்திருப்பது அவளுக்கே புரிந்தது. ஆசையால் தாழும்போது கர்வத்தால் உயர முடியாதென்றும் இந்த அநுபவம் அவளுக்குப் புரிய வைத்திருந்தது.

‘பெண்ணின் அழகு பற்றிய செருக்கு அவளுடைய காதலால் அழிந்துபோகிறது. ஆணின் பெருமிதம் பற்றிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/105&oldid=1231536" இலிருந்து மீள்விக்கப்பட்டது