பக்கம்:மணி பல்லவம் 4.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

719

களிலும், கைமூட்டுகளிலும் பலமான அடிகள் பட்டிருந்தன. இடுப்பிலோ, காலிலோ எங்கோ மிகவும் பலமான அடிபட்டிருந்ததென்றும் அவரால் உணர முடிந்தது. உடலில் வார்த்தைகளால் அளவிட்டு உரைக்க முடியாத சோர்வு தெரிந்தது. நிலவறையின் கடைசிப் படிக்கும் கீழே நிலைகுலைந்து உருண்டு விழுந்தபோது அவருடைய கண்முன் எல்லாம் தலைகீழாகச் சுழல்வது போலத் தெரிந்தது. வலது கால் பாதத்தை அழுத்தி ஊன்றிக்கொண்டு உந்தி எழுந்திருக்க முயன்றார் அவர். எழ முடியவில்லை.

ஆண்டுக் கணக்கில் பிணியுற்று முடங்கிக் கிடந்தது போல் உடம்பு வலித்தது. இரண்டு கால்களில் ஏதோ ஒன்றில் எலும்பு முறிந்திருக்குமோ என்று பயமும் நடுக்கமும் பிறந்தபோது கருங்கல்லாய் இறுகிப் போ யிருந்த அந்தக் கொடியவருக்குக் கூடக் ‘கோ'வென்று கதறி அழுதுவிட வேண்டும் போல் வருத்தமாக இருந்தது. முழங்கால்களில் இரத்தமும் கசியத் தொடங்கிவிட்டது.

இதே பெருநிதிச் செல்வரின் மாளிகைக்குக் கீழே உள்ள இரகசியச் சிறைக்கூடங்களிலும், கொடிய விலங்குகள் அடைக்கப்பட்டிருக்கும் காராக்கிருகங்களிலும் இப்போது தான் வைக்கப்பட்டிருப்பது போலப் பலரைப் பல சமயங்களில் முன்பு தன் கைகளாலேயே தள்ளி அடைத்ததையெல்லாம் வரிசையாக நினைத்துப் பார்த்தார் நகைவேழம்பர். நாய்க்குச் சோறு வைப்பது போல் இன்று தனக்குச் சோறும் நீரும் வைக்கப் பட்டதைத் தான் கேவலமாக எண்ணுவது போலத் தானே அவர்களும் அன்று எண்ணித் துடித்திருப்பார்கள் என்று ஞாபகம் உண்டாயிற்று அவருக்கு.

அப்போது தான் நிதியறையின் படிகளிலிருந்து மட்டும் சறுக்கியிருப்பதாக அவர் நினைக்கவில்லை. வாழ்க்கையில் தன்னுடைய எல்லா நம்பிக்கைகளிலிருந்துமே சறுக்கியிருப்பதாகத் தோன்றியது. மனைவி, மக்கள், உள்ளம், உறவு எதுவுமே இல்லாமல் யாருக்காக இவ்வளவு கொடுமையாக வாழ்ந்தோம் என்று நினைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/110&oldid=1231539" இலிருந்து மீள்விக்கப்பட்டது