உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி பல்லவம் 4.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

720

மணிபல்லவம்

துப் பார்க்க முயன்றார் அவர். கொடுமையாக வாழ்ந்தோமா அல்லது பொய்யாக வாழ்ந்தோமா என்று தனக்குத்தானே அவர் கேட்டுக்கொண்ட கேள்வி இரண்டு பிரிவுகளாகக் கிளைத்தது. இந்த விநாடி வரையில் என்னென்ன பாவங்களையும், கொடுமைகளையும் நான் செய்திருக்கிறேன் என்று தனக்குத்தானே பிரித்து எண்ணிப் பார்க்க வேண்டிய அவசியமே அவருக்கு ஏற்படவில்லை. காரணம் தான் செய்யாமல் எஞ்சிப் போகும்படி விட்ட பாவம் ஒன்றுமில்லை என்று அவருக்கே தெரிந்திருந்தது!

அவர் தன் மனத்தில் தனக்குத்தானே கேட்டுக் கொண்ட இரண்டு கேள்விகளுக்கு விடையே கிடைக்கவில்லை. ‘இதுவரை நல்லதாக என்ன செய்தோம்? கெட்டதாக என்ன செய்யவில்லை’. இந்த இரண்டு கேள்விகளுக்கும், ‘ஒன்றுமில்லை ! ஒன்றுமில்லை!’ என்பதைத் தவிர வேறு பதில் ஏதும் அவருடைய மனத்திலிருந்து எழவே இல்லை.

தன்னுடைய பெயரின் பொருளுக்குச் சிறிதுகூடப் பொருத்தமில்லாமலே தான் வாழ்ந்திருப்பதாக நினைவு வந்தது அவருக்கு. நகைவேழம்பர் என்றால் பிறருக்குச் சிரிப்பும் மகிழ்ச்சியும் உண்டாக்குகிற பரியாசகர் என்றுதான் காவிரிப் பூம்பட்டினத்துக் கூத்தரங்கங்களிலும், நாடகக் கலைஞர்களிடையேயும் பொருள்படுவது வழக்கம். தானும் எப்போதோ ஒரு காலத்தில் அப்படிச் சில ஆண்டுகள் இருந்ததைக் கடந்த காலத்துக் கழிவிரக்கமாக அவரால் நினைத்துக்கொள்ள முடிந்தது. இப்படி மாறியபின்பு தன் பழைய பெயருக்கு ஏற்பத் தான் யாருக்கும் சிரிப்போ மகிழ்ச்சியோ ஏற்படுத்தியதாக அவருக்கு ஞாபகம் இல்லை.

பூம்புகாரின் பட்டினப்பாக்கமும், மருவூர்ப்பாக்கமும் சந்திக்கிற நாளங்காடியின் கலகலப்பான இடத்தில் கூத்தரங்கம் ஒன்றில் அவர் புகழ்பெற்ற நகைச்சுவை வேழம்பராக இருந்த காலம், அதிலிருந்து மாறியபோதே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/111&oldid=1231540" இலிருந்து மீள்விக்கப்பட்டது