பக்கம்:மணி பல்லவம் 4.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

722

மணிபல்லவம்

இப்படியே விடமாட்டோம்’ என்று ஒன்றாகச் சேர்த்து வந்து வளைத்துக் கொண்டு விட்டாற்போல் அவரை மலைப்பு அடையச் செய்திருந்தன. அவர் வீழ்ந்து விட்டார். இப்போது நிச்சயமாக வீழ்ந்தே விட்டார்.

நிதியறையின் எதிர்ப்புறத்திலிருந்து இருளடைந்த சுவர் திடீரென்று பிளப்பது போலவும் அந்தப் பிளவிலிருந்த ஒரு புலி பயங்கரமாகப் பாய்ந்துகொண்டு வருவது போலவும். அந்தப் புலியே அருகில் வரும்போது பெருநிதிச் செல்வராக மாறிவிடுவது போலவும் பிரமையான பொய்க் காட்சிகள் அவர் கண்ணில் தெரிந்தன. தானும் புலியாக மாறி எதிர்த்துப் போராடுவதுபோலக் கற்பனை செய்ய முயன்றார் அவர்.

‘மரணாவஸ்தை மரணாவஸ்தை என்று சொல்கிறார்களே, அது இப்படித்தான் இருக்குமோ?’ என்று அப்போது நினைக்கத் தோன்றியது நகைவேழம்பருக்கு.

இப்படி நினைத்தபோது தன்னைச் சுற்றிலும் காலனின் கொடிய பாசக் கயிறுகள் சுழன்று சுழன்று வீசப்பட்டு விழுவது போலவும், தான் அந்தக் கொடிய பாசத்தில் சிக்கிக்கொண்டு விடாமல் தப்பித்துவிட உடனே முயல வேண்டும் போலவும் அவருக்குத் தோன்றியது. பதறி எழுந்து அங்கிருந்து ஓடிவிடும் நோக்கத்துடன் வலது கால் பாதத்தைப் பதித்து ஊன்றி மேலே எழ முயன்று மறுபடி கீழேயே விழுந்தார் அவர். அப்படி விழுந்ததும் அவருக்கு முன்னைவிடத் தளர்ச்சி பெருகியது. முழங்கால்களைத் தொட்டுப் பார்த்துக் கொண்டார். தொட்ட இடத்தில் இரத்தம் பச்சையாகப் பட்டுக் கை நனைந்தது. பாவத்தைத் தொடுவதுபோல் அவருக்கே அருவருப்பாக இருந்தது அப்போது.

‘உன் உயிரைக் கொடுத்துவிடு! இனிமேல் நீ வாழ்வதைக்கூடப் பொய்யாக்கிவிட வேண்டும்’ என்று யாரோ பேய்க்கூச்சல் இட்டுக்கொண்டே வந்து தன் கழுத்தை இறுக்குவது போல் இருந்தது அவருக்கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/113&oldid=1231542" இலிருந்து மீள்விக்கப்பட்டது