பக்கம்:மணி பல்லவம் 4.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

723


அந்த விநாடியில் தான் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பது மெய்யா, பொய்யா என்று புரியாமல் அவர் உடல் நடுநடுங்கி, நினைவிழப்பது போலத் தலை சாய்ந்தார். இருட்டில் அடைபட்டுக் கிடந்த வெளவால் ஒன்று தன் சிறகுகளைப் படபடவென்று அடித்துக் கொண்டு அவருடைய தலைக்குமேல் பறந்துவிட்டு மீண்டும் தன்னுடைய பழைய இடத்தில் போய்த் தலைகீழாகத் தொங்கியது.

18. சோற்றுச் செருக்கு

ந்தையார் கீழே எறிந்த ஊன்று கோல் பிடி வேறு, தண்டு வேறாகக் கழன்று விழுந்தபோது, இப்படிப் பொருள் கூடச் சில சமயங்களில் நிற்கத் துணை புரியாது. இடறி என்னை ஏமாற்றி விடுகின்றன என்று அவர் கூறிய வார்த்தைகளுக்கு நேரான பொருள் வானவல்லிக்குப் புரிந்தது. ஆனால் அந்த வார்த்தைகளில் அடங்கியிருப்பதாக அவள் சந்தேகப்பட்ட ஏதோ ஒரு குறிப்புப் பொருள் மட்டும் அவளுக்குப் புரியவேயில்லை.

“ஊன்றி நிற்பதற்குப் பயன்படவில்லை என்பதை அப்படிச் சொல்லுகிறாரா? அல்லது அதில் இருப்பதாக அவர் நம்பிக்கொண்டிருந்த வேறு பயன் ஒன்று இல்லாமற் போய்விட்டதை அப்படிச் சொல்கிறாரா?”

ஒன்றும் புரியாமல் மருண்டு நின்ற வானவல்லி முதலில் நினைத்தது போலக் கூடிய விரைவில் அவர் முன்னிலையிலேயிருந்து தப்பிச் சென்றுவிட வேண்டுமென்றுதான் மீண்டும் நினைத்தாள். சுற்றிலும் நெருப்புக் கனலும் நீற்றறையில் நிற்பது போல இப்போது அங்கே நின்றாள் அவள். அவருடைய கோபத்துக்கு அப்படி ஓர் ஆற்றல் உண்டு என்பதைப் பலமுறை கண்டு உணர்ந்திருக்கிறாள் அவள். அந்தக் கோபம் சூழ்நிலையையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/114&oldid=1231543" இலிருந்து மீள்விக்கப்பட்டது