நா. பார்த்தசாரதி
725
விழுந்து கிடக்கின்றதே, இந்த ஊன்றுகோலின் தண்டுக்கும், பிடிக்கும் நடுவே உள்ள குழலில் நான் வைத்திருந்த அரும் பெரும் பண்டம் ஒன்றையுமே இப்போது இதில் காண முடியவில்லை மகளே!”
ஆத்திரமாகப் பேசிக் கொண்டே வந்தவர் அதையெல்லாம் சொல்வதற்கும் கேட்கச் செய்வதற்கும் அவள் தகுதியுடையவள் இல்லை என்பதைத் திடீரென்று உணர்ந்து கொண்டு விட்டதைப் போலப் பேச்சை நடுவிலேயே நிறுத்தினார். அதுவரை நாம் பேசியிருந்த பேச்சுக்களால் மகளுடைய முகத்தில் என்னென்ன உணர்வுகள் விளைந்திருக்கின்றன என்பதை அவளே பார்த்துவிட முடியாத வேகத்தில் அவளுடைய முகத்திலிருந்து தான் பார்த்துத் தெரிந்துகொண்டு விரைவாய்க் கீழே குனிந்து ஊன்றுகோலையும் பிடியையும் எடுத்துத் திருகினார் அவர்.
வானவல்லி அந்த நேரத்தைத் தான் வெளியேறிச் செல்வதற்கு அவர் கொடுத்த அரிய சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொண்டு அங்கிருந்து மெல்ல நழுவினாள். அவரும் அவளைத் தடுக்கவில்லை. அப்போது அவருக்கும் வேறு வேலைகள் அவசரமானவையாகவும் அவசியமானவையாகவும் செய்வதற்கு இருந்ததனால் அவள் அங்கிருந்து போவது பற்றி நினைக்கவோ கவலைப்படவோ விரும்பவில்லை அவர்.
அவள் சென்றதும் ஊன்றுகோலில் பொதிந்து வைக்கப்பட்டிருந்த ஐம்படைத் தாலியை யார் அதிலிருந்து எடுத்திருக்க முடியும்? என்ற சிந்தனையில் அவர் மூழ்கினார். அந்தப் பொருள் அவ்வளவு பத்திரமாக அதற்குள் பொதிந்து வைக்கப்பட்டிருக்கும் உண்மை தன்னைத் தவிர இன்னும் ஒரே ஒருவருக்குத் தான் தெரியும் என்ற ஞாபகம் அவருக்கு வந்தது. என்னுடைய வாழ்க்கையையே மாற்றித் தள்ளிவிடக் கூடிய பெரிய இரகசியங்களுக்கு அடையாளமான அந்த ஐம்படைத் தாலி இந்த ஊன்றுகோலுக்குள் வைக்கப்