726
மணிபல்லவம்
பட்ட போது நான் என் இரு கண்களால் பார்த்ததைத் தவிர இன்னும் ஒரு கண் மட்டும் பார்த்திருக்கிறது. அந்தப் பொருள் இதனுள் வைக்கப்பட்டிருப்பதை நினைவு கூர்ந்து இப்போது திருடியிருக்க முடியுமானால் அப்படித் திருடியவன் அந்த ஒரு கண்ணுக்கு உரியவனாகத்தான் இருக்க வேண்டும். கற்பூரக் கப்பலைத் தேடிக் கொண்டு கடற்பயணம் செல்வதற்குமுன் சுரமஞ்சரியை பயமுறுத்தி மருட்டுவதற்கு ஓர் அடையாளமாக இதை என்னிடமிருந்து வாங்கிக் கொண்டு போய் இருட்டில் அவள் மாடத்திலே வைத்து விட்டு வந்தவனும் அந்த ஒற்றைக்கண்ணுக்கு உரியவன்தான். ஏதோ திட்டமிட்டு என்னைக் கவிழ்த்துவிடும் எண்ணத்தோடுதான் அவன் அந்த ஐம்படைத் தாலியை இதற்குள்ளேயிருந்து வெளியேற்றியிருக்க வேண்டும். அதை இதிலிருந்து வெளியேற்றுவதற்கும் என் உயிரையே உடம்பிலிருந்து வெளியேற்றுவதற்கும் அதிக வேறுபாடில்லை. இந்த ஊன்றுகோல் யாரை மருட்டுவதற்காக அந்த மாடத்தில் இதுவரை வைக்கப்பட்டிருந்ததோ அந்த மாடத்திலிருந்தவர்களுக்கு இதைப் பிடி வேறு தண்டு வேறாகக் கழற்ற முடியும் என்பதே தெரிந்திருக்க நியாயமில்லாதபோது அவர்கள் அதை இதிலிருந்து வெளியே எடுத்திருப்பார்களோ என்று நான் சந்தேகப்படுவதற்கும் இடமில்லை.
சந்தேகமில்லாமல் இது நகைவேழம்பருடைய வேலைதான். இந்த ஐம்படைத் தாலியும் அதைப் பற்றிய உண்மைகளும் அவரால் வெளிப்படுத்தப் பெறுவதற்கு முன்னால் அவருடைய உயிரையே இந்த உலகத்திலிருந்து நான் முதலில் வெளிப்படுத்தி விட்டால் என்ன ? என்று கொடுமையாகவும், குரூரமாகவும் முதிர்ந்து நின்று நினைத்தார் பெருநிதிச் செல்வர். இப்போது அந்த ஒற்றைக்கண் வேங்கை தன்னிடம் வகையாக மாட்டிக் கொண்டு அடைபட்டிருப்பதால் தான் நினைப்பதைச் செய்வது சாத்தியமானதே என்று நம்பினார் அவர்.