பக்கம்:மணி பல்லவம் 4.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

"என்ன செய்வது? கண்ணாடி எல்லா உருவத்தையும் தனக்குள் வாங்கிக் காட்டுகிறாற் போலப் பரிசுத் தமானவர்கள் தங்களோடு பழகுகிறவர்களை யெல்லாம் சார்ந்து தன் வண்ணமாகச் செய்து விடுகிறார்கள்!”

இதற்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல் தலை குனிந்தாள் மணிமார்பனின் மனைவி.

“பதுமை! இதோ இப்படி என்னைப் பார்! உனக்கு ஒரு பெரிய உண்மையைச் சொல்லித் தருகிறேன்” என்று தன் மனைவியை அவளுடைய அழகிய பெயரைச் சொல்லி அழைத்தான் மணிமார்பன், பிடரியில் வேர்க்கும்போது எங்கிருந்தோ தற்செயலாகக் குளிர்ச்சியை வீசிக்கொண்டு சில்லென்று பாய்ந்து வந்ததென்றலைப் போல அவன் தன்னைப் பெயர் சொல்லி அழைத்த மகிழ்ச்சியில் குழைந்து நிமிர்த்து பார்த்தாள் பதுமை. ஓவியன் மணிமார்பன் சிரித்துக்கொண்டே அவளை நோக்கிச் சொன்னான்:

“பதுமை! நீங்கள் பெண்கள். எந்த விஷயத்தையும் ஒரு குறிப்பிட்ட எல்லைவரைதான் உங்களால் நினைத்துப் பார்க்க முடியும். அதற்கு அப்பால் நினைக்க முடியாது. அல்லது நினைக்க விரும்பமாட்டீர்கள். எல்லாப் பூக்களும் மென்மை என்பது பொதுக்குணமாகி நிற்பது போல் பெண்களாகிய நீங்கள் அன்பை மட்டும் மையமாக வைத்துக்கொண்டே யாவற்றையும் சிந்திக்கிறீர்கள். ஒற்றைத் தூணில் நிற்கிற மண்டபத்துக்குப் பலம் குறைவு. தூணுக்கும் சுமை அதிகம்...

“எப்படியோ பேச்சைத் தொடங்கி எப்படியோ வளர்த்து முடிவில் பெண்களெல்லாம் உணர்ச்சி இல்லாத குத்துக்கற்கள் என்று முடிக்கிறீர்களே; இது உங்களுக்கே நன்றாயிருக்கிறதா?”

“அவசரப்படாதே பதுமை! நான் சொல்ல வந்தது வேறு. நீ புரிந்துகொண்டது வேறு. கோபமோ தாபமோ, ஊடலோ, உவகையோ, எல்லா உணர்ச்சிகளையும் அன்பு என்ற ஒரே அடிப்படையில்தாள் அடைகிறீர்கள் பெண்களாகிய நீங்கள். எல்லா விளைவுகளுக்கும் ஒரே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/12&oldid=1231442" இலிருந்து மீள்விக்கப்பட்டது