பக்கம்:மணி பல்லவம் 4.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

732

மணிபல்லவம்

மறுபடியும் அவர் முன்னைவிடப் பலமாகத் தட்டிய போது வளைகுலுங்கும் ஒலியோடு யாரோ நடந்து வந்து கதவைத் திறந்தார்கள்.

கதவைத் திறந்தவள் தோழிப் பெண்ணாகிய வசந்தமாலை என்று தெரிந்ததும் “சுரமஞ்சரி அதற்குள் உறங்கி விட்டாளா பெண்ணே? என்று அவர் அவளிடம் கேட்டார். தன்னை அந்த நேரத்தில் அங்கே கண்டு அந்தத் தோழிப் பெண் பயந்து நடுங்குவதை அவர் பார்த்தார். தனக்குப் பதில் சொல்வதற்குக்கூட நா எழாமல் அவள் அச்சம் கொண்டு திகைத்துப் போய் நிற்பதைப் பொறுக்க முடியாமல் மறுபடி அதே கேள்வியை முன்னினும் உரத்த குரலில் கேட்டார் பெருநிதிச் செல்வர். அந்தக் குரல் அவளை மேலும் நடுநடுங்கச் செய்தது.

“இதோ தலைவியை எழுப்புகிறேன்” என்று கூறிக் கொண்டே சுரமஞ்சரி தூங்கிக்கொண்டிருந்த மஞ்சத்தருகே சென்று மெல்ல அவளுடைய தோளைத் தொட்டு எழுப்பினாள் வசந்தமாலை. அப்படி எழுப்புவதற்கு முன் தூங்கும் தன் தலைவியின் முகத்தை அவள் பார்த்தபோது அந்த முகம் உறக்கத்திலும் சிரித்துக் கொண்டிருப்பதைக் கண்டு அச்சிரிப்புக்குக் காரணமான ஏதோ ஓர் இனிய கனவு தலைவிக்குக் கிடைத்திருக்க வேண்டும் எனப் புரிந்தது வசந்தமாலைக்கு. அப்படிப் பட்ட கனவிலிருந்து அவளை வலிய எழுப்பும் துன்பமான செயலைத் தன் கைகளால் தானே செய்ய வேண்டியிருக்கிறதே என்ற வருத்தத்தோடு தலைவியை எழுப்பினாள் தோழிப் பெண். தூக்கத்திலிருந்து விழித்து எழுந்த சுரமஞ்சரி முற்றிலும் விழிப்புக் கொள்ளாத அரைகுறை உறக்கத்தில், ‘வசந்தமாலை! அவருடைய கண்களில் என்னுடைய கனவுகள் வளருகிறதடீ’ என்று வாய் சோர்ந்து எதையோ முன்னும் பின்னும் தொடர்பின்றி அரற்றினாள். தலைவி அரற்றும் அந்தச் சொற்கள் கதவருகே வந்து நிற்கும் பெருநிதிச் செல்வரின் செவிகளில் கேட்டு விடக் கூடாதே என்று பயந்த வசந்தமாலை ‘அம்மா! கனவைப் பற்றி அப்புறம் பேசிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/123&oldid=1231550" இலிருந்து மீள்விக்கப்பட்டது