பக்கம்:மணி பல்லவம் 4.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

735

இருக்கின்றன? நீங்கள் இருவருமே ஒன்றும் உண்ண வில்லையா?’ என்று கவனத்தில் பட்ட வேறொரு காட் சியைப் பற்றித் தேவையைவிட அதிக அக்கறை எடுத்துக் கொண்டவர் போலக் கேட்டார். அவர் தங்களை அப்போது திட்டமிட்டுக் கொண்டு ஏமாற்றுகிறார் என்று சுரமஞ்சரிக்கும் வசந்தமாலைக்கும் ஓரளவு புரிந்தது. தொலைந்துபோன ஐம்படைத் தாலி திரும்பக் கிடைத்ததால் தனக்கு ஏற்படுகிற மகிழ்ச்சியைத் தெரியவிடாமல் செய்வதற்காகத்தான் கவனம் செலுத்தி விசாரிக்க வேண்டாத சிறிய விஷயமான இந்த உணவுப் பேழையைப் பற்றி அவர் விசாரிக்கிறார் என்றும் அவர்கள் புரிந்துகொண்டார்கள். நொடிப்போதில் எதிரே நிற்கிறவர்களுடைய ஆவலையும் மனப்போக்கையும் புரிந்துகொண்டு தாம் அதற்கேற்ப விரைந்து மாறிக்கொண்டு எதிரேயிருப்பவர்களின் உணர்வைத் தாங்கி நிற்கும் அந்தத் தந்திரத்தைப் பார்த்து வியப்பதா, பயப்படுவதா என்றே புரியாமல் மலைத்து நின்றார்கள் தோழியும் அவளுடைய தலைவியும். அப்போது அவருடைய குரல் இருந்தாற்போலிருந்து திடீரென்று உரம் பெற்று மிக வலிமையாக அவர்களை நோக்கி ஒலித்தது.

“பெண்ணே! உன்னைக் காட்டிலும் உன்னுடைய தந்தைக்குப் புத்தி அதிகமாக இருக்கும் என்பதை நீ ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. சில ஆண்டுகளுக்கு முன் ஏதோ ஓர் இந்திரவிழாவின் இரண்டாவது நாள் பூத சதுக்கத்துக் கூட்டத்தில் யாரோ பிள்ளையாண்டானைக் கண்டுபிடித்து அழைத்து வந்து அவனுடைய ஓவியத்தை வரைந்து வாங்கினாய் அல்லவா? அந்த நாளிலிருந்து இன்று இந்த ஐம்படைத் தாலியைக் கீழே கிடந்ததென்று சொல்லி என்னிடம் தோழி மூலமாக எடுத்துக் கொடுக்கச் செய்யும் இந்த விநாடி வரை உன் தந்தைக்கே விருப்பமில்லாத பல காரியங்களை நீ வரிசையாகச் செய்திருக்கிறாய் என்பதைப் புரிந்து கொள். இந்த நிலையைத் தெளிவுபடுத்தி விவரமாக உனக்கு இப்போது சொல்ல முடியாதவனாக இருக்கிறேன் நான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/126&oldid=1231554" இலிருந்து மீள்விக்கப்பட்டது