738
மணிபல்லவம்
மறவனுடைய மனம் எண்ணியது. கொடுமைக்கு எல்லாம் பெரிய கொடுமையாகிச் சூழ்ச்சிக்கு எல்லாம் பெரிய சூழ்ச்சியாகித் தங்களைப் போன்றவர்களுக்கு வழிகாட்டும் மாபெரும் கொடிய சக்தியாயிருந்த நகைவேழம்பரையே கொன்று தீர்த்துவிடச் சொல்லித் தன்னை அவர் தூண்டுவதை எண்ணியபோதே அருவாளனுக்கு உடம்பு சிலிர்த்தது. வாழ்க்கையில் எதற்காகவும் பயப்படுகிற நிலை அருவாளனுக்கு இன்றுவரை ஏற்பட்டதில்லை. இவ்வளவு பெரிய பூம்புகார் நகரத்தில் இரண்டே இரண்டு பேர்தான் அவனுக்கு வியப்பையும், மலைப்பையும் உண்டாக்கியிருக்கிறார்கள். அந்த இருவரில் ஒருவரை அவன் இன்றிரவு தன் கையாலேயே கொல்லப் போகிறான், இந்தக் கொலையைச் செய்வதன் மூலமே மற்றொருவருக்கு நன்றி செலுத்தப் போகிறான். கடைசியில் இந்த நகரில் இனிமேல் அவனுடைய மலைப்புக்குரியவராக ஒரே ஒருவர்தான் மீதமிருக்கப் போகிறார். அந்த ஒருவர் யாரோ அவருக்கு இனி அவன் ஆட்பட்டுத்தான் ஆகவேண்டும். ஏனென்றால், நீண்ட நாட்களாக அவன் அவருக்குச் செஞ்சோற்றுக் கடன்பட்டிருக்கிறான். சோற்றுக் கடனும் நன்றிகடனும் படுவது பொருட்கடன் படுவதைவிட வேதனையானது என்று, இந்த விநாடியில் தான் செய்வதற்குப் போய்க் கொண்டிருந்த காரியத்தினால் நன்றாக உணர்ந்திருந்தான் அருவாளன். இந்த அருவருப்பும், உணர்ச்சியும் அவன் மனத்தினுள் ஏற்பட்ட கணத்தில் தொலைவாக எங்கோ ஒலித்துக் கொண்டிருந்த பார்வதிலோசனம் என்ற தாளம் குபீரென்று முன்பு ஒலித்ததை விடக் கடுமையாகிப் பெரியதாய் அதிர்ந்து பூம்புகார் நகரத்தையே கிடுகிடுக்கச் செய்வது போலப் பிரமையை உண்டாக்கிற்று. அருவாளனால் அந்த நேரத்தில் கேட்டுப் பொறுத்துக்கொள்ள முடியாத கொடுமையான ஒலியாயிருந்தது அது.
அந்த இராப்போதில் அருவாளனும் அவனுடைய கூட்டாளியும் பெருமாளிகையை நெருங்கியபோது அது