நிசப்தமாயிருந்தது. அன்று மாலையில் அருவாளனை அழைத்துப் போவதற்காக வந்திருந்த அதே காவலன் பெருமாளிகை வாயிலில் இவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தான். அருவாளனையும் அவனோடு வந்த வனையும் தன்னைப் பின்தொடர்ந்து வருமாறு சைகை செய்து அழைத்துக் கொண்டு போய் ஓசையற்ற இருண்ட மாளிகையின் முன்கூடங்களைக் கடந்து பெரு நிதிச் செல்வருடைய அந்தரங்கமான பகுதியில் கொண்டு சேர்த்தான் அந்தக் காவலன்.
ஏதோ பெரிய விளைவை எதிர்பார்த்துக் காத்திருக்கிற பரந்த மௌனம்தான் அங்கு நிலவியது. அருவாளனோடு உடன் வந்திருந்த மற்றொரு நாகனை வெளியே இருக்கச் செய்துவிட்டுப் பெருநிதிச் செல்வரும் அருவாளனும் தனியே சிறிது நேரம் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டார்கள். சிறிது நாழிகைக்குப் பின்பு முன்னேற்பா!.டாகத் திட்டமிட்ட கொலை எண்ணத் தோடு நகைவேழம்பர் அடைக்கப்பட்டிருந்த நிதியறைக்குள் அவர்கள் மூவரும் இருண்ட நிழல்களே இருளில் படியிறங்கிச் செல்வது போலச் சென்றபோது அந்தக் காரியத்தைப் பார்க்க இரவுக்கே வெட்கமாக இருந்ததோ, என்னவோ? எங்கும் அடர்ந்து செறிந்து கொண்டு, இருளே, நாணத்தோடு இந்தச் செயலைக் கூர்ந்து கவனிப்பது போலிருந்தது அது.
அருவாளனும், பெருநிதிச் செல்வரும் தத்தம் கைகளில் உருவிய வாளுடனும் உள்ளே அடைபட்டுக் கிடக்கிறவனுடைய வரம்பில்லாத எதிர்ப்பை எந்தக் கணமும் தங்களுக்கு மிக அண்மையில் எதிர்பார்க்கிற கவனத்துடனும் நிலவறையில் இறங்கியபின் மூன்றாமவன் அவர்கள் செய்யப் போகிற காரியத்துக்கு ஒளி தருவதற்காகத் தன்னிடம் அவர்களே சொல்லி ஏற்பாடு செய்திருந்தபடி நிலவறைக்காகக் கீழே இறங்கும் வழியில் மூன்றாவது படியிலோ நான்காவது படியிலோ நின்று கொண்டு தீப்பந்தத்தைக் காண்பித்தான்.