நா. பார்த்தசாரதி
741
தெரிகிறது. ஆகவே பொய்யாக நடித்து ஏமாற்ற வேண்டிய அவசியம் இப்போது இவருக்கு இல்லை. உங்களுக்குச் சந்தேகமாக இருந்தால் நீங்கள் விலகி நிற்கலாம். இவரை நான் கவனிக்கிறேன்” என்று பெருநிதிச் செல்வரிடம் கூறிவிட்டுக் கீழே குனிந்து நோக்கினான் அருவாளன், பெரு நிதிச் செல்வர் விலகியே நின்றார். அருவாளன் பார்த்ததில் நகைவேழம்பர் பிரக்ஞையின்றித் துவண்டு கிடந்தார். உடலில் பல பகுதிகளில் ஆழமான காயங்களும், ஊமை அடி களும் பட்டிருந்தன. முழங்கால் மூட்டியில் இரத்தம் பெருகி வடிந்து தணிந்திருப்பதைப் பார்த்துப் புரிந்து’ கொண்டான் அருவாளன்.
நகைவேழம்பருடைடய முழங்காலில் அந்த இடத்தை அருவாளன் தொட்டபோது கிணற்றுக்குள்ளிருந்து மரண வேதனையோடு பேசுகிறாற் போன்ற நலிந்த குரலில் வலியோடு அவர் முனகினார். ‘மூச்சு இன்னும் இருக்கிறது’ என்பதைத் தவிர அதிகமான பலம் எதுவும் அந்த உடம்பில் அப்போது இருந்ததாகத் தெரியவில்லை. கற்பூரத் தீயினால் காந்திப்போய்க் கருகி, எரிந்த புண்களும் அங்கங்கே அந்த உடலிலே தெரிந்தன. மூடி அவிந்து போகாமல் பார்ப்பதற்கு மீதமிருந்த ஒரே ஒரு கண்ணும் கூடத் தளர்ந்து குழிந்து வாடிச் சொருகி இமையின் கீழ் இடுங்கியிருந்தது. புண்ணைப் பார்ப்பது போல் விகாரமாகத் தோன்றிய அந்தப் பூத உடம்பின் அருகேயிருந்து விலகி மெல்ல எழுந்து நின்று கொண்டு இன்னதென்று விளக்கிச் சொல்ல முடியாத ஏதோ ஒரு மாற்றம் தன்னுடைய குரலில் ஒளிப்பதைத் தானே தவிர்த்துக் கொள்ளவோ, மாற்றிக் கொள்ளவோ, முடியாமல் பெருநிதிச் செல்வரிடம் பேசினான் அருவாளன்.
“எந்த உயிரை இந்த உடம்பிலிருந்து நீக்கிவிட வேண்டும் என்று இவ்வளவு முன்னேற்பாடும் திட்டமும் செய்தீர்களோ, அந்த உயிருக்குரியவர் இப்போதே முக்கால்வாசி இறந்துபோய் விட்டார் போலத் தோன்றுகின்றதே ஐயா...”