பக்கம்:மணி பல்லவம் 4.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

745

'நீ என்ன வேண்டுமானாலும் செய்துகொள்; எனக்கு என்ன வந்தது?’ என்று அவனுக்குத் தன் மொழியில் எடுத்தெறிந்து பதில் சொல்வதைப் போலக் காளிகோட்டத்துத் திரிசூலத்தின் நுனியில் உட்கார்ந்திருந்த கோட்டான் ஒன்று நாலைந்து முறை தொடர்பாகக் கத்திவிட்டு விருட்டென்று எழும்பிப் பறந்து சென்றது. மனிதத் தலைபோல் தலையும் பருந்து உடலும் கொண்டு மயானங்களில் திரியும் ஆண்டலை எனப்படும் கொடிய பறவைகள் நாலைந்து காளிக் கோட்டத்து இடி சுவரில் இருந்தன. பிரம்மாண்டமான மண் பிரதிமை ஒன்று கோட்டத்துக்குள் நுழைகிற இடத்தின் வலது பக்கமாகத் தன் குழிந்த கண்களை உருட்டி விழித்தபடியிருந்தது. வேறு எந்த அத்திய மனிதர்களின் அரவமும் அப்போது அங்கே இல்லை.

“தம்பி! காளி கோட்டத்தின் உட்பக்கம் யாராவது இருக்கிறார்களா என்று போய் பார்த்துவா” என உடனிருந்த தோழனை ஏவினான் அருவாளன். அவன் போய்ப் பார்த்துவிட்டு உள்ளே வந்து காளி சிலையைத் தவிர வேறு ஒன்றுமில்லை என்பதாகச் சொன்னான்.

அப்போது கீழே கிடத்தியிருந்த நகைவேழம்பரின் உடல் மெல்ல அசைந்தது. ஈனசுவரத்தில் அவர் ஏதோ முனகுவதும் கேட்டது. அவரருகே சென்று மண்டியிட்டு அமர்ந்துகொண்டே அருவாளன், “தம்பீ! இப்போது இவருக்குச் சற்றே சக்தியூட்டிச் சிறிது நேரம் இவரைப் பேசச் செய்தால் ஏதாவது பயனுள்ள செய்திகள் இவரிடமிருந்து நமக்குத் தெரியலாமென்று நான் எண்ணுகிறேன். நீ போய்ப் பக்கத்தில் எங்காவது தண்ணீர் இருந்தால் கொண்டு வா. தண்ணீர் மட்டும் போதாது. இதோ இந்தத் திரிசூலத்துக்கு மேலே உள்ள நெல்லி மரக்கிளையில் அம்மானைக் காய்களைப் போல் முற்றிக் கனிந்த பெரிய பெரிய நெல்லிக்கனிகள் சரம் சரமாய்த் தொங்குகின்றன. அவற்றில் நாலு கனிகளைப் பூறித்துக் கல்லில் தட்டி நீரில் கலந்து, அந்தச் சாற்றை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/136&oldid=1231562" இலிருந்து மீள்விக்கப்பட்டது