பக்கம்:மணி பல்லவம் 4.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

747

"நீ அலைவாய்க்கரை யவனப்பாடியைச் சேர்ந்த நாகர் குலத்து அருவாள மறவன் அல்லவா?’ என்று அவனை நோக்கி அவன் பெயரோ, ஞாபகமோ சிறிதும் குன்றாமல் தம் குரல் மட்டும் குன்றிப்போய்க் கேட்டார் அவர். ‘ஆமாம்’ என்பதற்கு அறிகுறியாக அவரை நோக்கித் தலையாட்டினான் அருவாளன். அடுத்தகணம் அவனை நோக்கி வேகமாக அவரே மேலும் சொல்லலானார்:

‘நான் இப்போது எந்த நிலையில் இங்கே கொண்டு வந்து எதற்காகக் கிடத்தப்பட்டிருக்கிறேன் என்பதைப் பற்றி நீ எனக்கு விளக்கிச் சொல்லுவதற்கு ஆசைப் படாதே அப்பனே! அதற்கு அவசியமே இல்லை. சொல்லாமல் எனக்கே எல்லாம் புரிகிறது. இந்த ஒரே ஒரு கண்ணுக்கு உலகத்தைப் பார்க்கும் ஒளி எந்தக் கடைசி விநாடி வரை இருக்கிறதோ, அதுவரை எல்லாமே புரியும். கண்ணெதிரே பார்ப்பவற்றில் எல்லாம் ஒருவன் தன்னுடைய சாவை மட்டுமே காண்பதுபோல் தவிக்கின்ற தவிப்புத்தான் மரண வேதனையாக இருக்குமானால், அதையே இப்போது நான் அடைந்து கொண்டிருக்கிறேன் என்று நீ புரிந்து கொள்ளலாம். இந்த வேதனையை மீறிக்கொண்டு எழுந்து நிற்க இப்போது எனக்கு வலிமை இல்லை. காலிலும் எலும்பு முறிந்திருக்கிறது. என்னுடைய இயல்பைப் பற்றி உனக்கும் நன்றாகத் தெரியும். தெரியாதவற்றைக் கேள்விப்பட்டும் இருப்பாய். என்னைப் போன்ற ஒருவனுக்கு இந்த நிலை ஏன் ஏற்பட்டதென்றாவது தெரிந்துகொள்ள நீ ஆசைப்படலாம். அப்படி ஆசைப் படுவது மனித இயற்கைதான். நானோ என்றும் என்னை மனிதனாகவே நினைத்துக் கொண்டதில்லை. என்னை ஒரு பெரிய அரக்கனாகப் பாவித்துக்கொண்டு அந்தப் பாவனையினாலேயே நான் பலமுறை பெருமைப்பட்டு இருக்கிறேன். கடைசியாக இப்போதும் எனக்கு அந்தப் பெருமை இருப்பதைத்தான் நான் உணர்கிறேன். பலபேரைத் துடிக்கத் துடிக்கக் கொன்று பழகிய எனக்கு நான் சாகவேண்டும் என்றும் செத்துப்போய்க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/138&oldid=1231564" இலிருந்து மீள்விக்கப்பட்டது