நா. பார்த்தசாரதி
749
முடியவில்லை. என் மனத்தில் இறுகிப் போயிருந்த பல எண்ணங்கள் இப்போது உடைகின்றன. என்னால் எதையும் பாதுகாக்க முடியவில்லை! இந்தப் பழைய கதவுகளைப் போலவே எதையும் மறைத்துக் காக்க முடியாமல் நான் உடைந்திருக்கிறேன்.”
தொடர்ந்து பேசிக்கொண்டே வந்தவர் பேச்சை நிறுத்திவிட்டு அருவாள மறவனையும் அவனுடைய தோழனையும் உற்றுப் பார்க்கலானார்.
சில கணங்கள் மூன்று பேர்களுடைய கண் பார்வையும் ஒன்றிலொன்று இணைந்து பிரியாமல் இலயித்திருந்தது. காற்றின் ஒசை மட்டும்தான் அப்போது அப்பகுதியில் கேட்டது.
மறுபடியும் அவரே பேசத் தொடங்கினார்:
“தெரிந்தோ தெரியாமலோ இப்போது இந்தக் காளி கோவிலில் நீ என்னைக் கிடத்தியிருக்கும் இடம் நான் சாவதற்கு மிகவும் பொருத்தமானது. சந்தேகமாயிருந்தால் நீயே மறுபடி பார்! இப்போது நான் சாய்ந்துகொண் டிருக்கிற இடம் இந்தக் கோவிலின் பலிபீடம்.
இதில் ஒரு காலத்தில் நிறைய இரத்தக்கறை படிந்திருக்கும். மறுபடி இன்னும் படியப்போகிறது. அப்படிப் படியப்போகிற இரத்தம் என்னுடைய பாவ இரத்தமாக இருக்கும்.
“என்னைப் பலிகொடுத்துவிட வேண்டியதுதான். ஆனால் பலி வாங்கிக் கொள்ள வேண்டியவர் மட்டும் ஏனோ இங்கு வரவில்லை. இந்தக் காளிகோட்டத்துப் புதரைச் சுற்றிலும் இப்போது ஊளையிடுகின்ற சுடுகாட்டு நரிகள் எல்லாம் என்னுடைய இரத்தத்துக் காகவும் இறைச்சிக்காகவும் ஊளையிட்டுக் கொண்டிருப்பதாகக் கற்பனை செய்து பார்க்க ஆசையாயிருக்கிறது எனக்கு. இந்தக் கற்பனையை எண்ணுவதில் எனக்குப் பயமே இல்லை.”