சோர்ந்து தளர்ந்து சாகக் கிடக்கிற அந்தக் கோலத்திலும்கூட அவருடைய காட்டாற்றுப் பேச்சில் குறுக்கிட்டு நடுவே பேசுவதற்குப் பயமாக இருந்தது அருவாளனுக்கு. அவருடைய தோற்றத்தில் ஏதோ ஒர் அம்சத்துக்கு இப்படிப் பயமுறுத்துகிற ஆற்றல் இருப்பதாக அவன் உணர்ந்தான். ‘விடிவதற்குள் இவரைத் தீர்த்துவிடாமல் திரும்பினால் பெருநிதிச் செல்வர் என்னைத் தீர்த்து விடுவாரே’ என்ற நினைப்பு வேறு இடையிடையே தோன்றி அருவாள மறவனுக்குத் தன் நிலையை உணர்த்திக் கொண்டி ருந்தது. உடனே தான் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கவும் அவனால் முடியவில்லை. அவரோ அந்தப் பழைய பலி பீடத்தில் சாய்ந்துகொண்டு உயிரைக் கொடுப்பதற்கு முன்னால் உணர்ச்சிகளை வாரி வாரிக் கொடுத்துக் குமுறிக் கொண்டிருந்தார். அவர் பேச்சுக் குறையவுமில்லை. நிற்கவுமில்லை. தொடர்ந்தது.
“அருவாளா! என்னுடைய நினைவுகளையெல்லாம் காலம் தேய்த்துச் சிதைத்துவிட்டது. நானே கால ஒட்டத்தில் சிதைந்துபோய் விட்டேன். இந்தப் பட்டினப்பாக்கத்தில் எட்டிப் பட்டமும் ஏனாதிப் பட்டமும் பெற்று வாழும் பெரிய பெரிய செல்வர்களுக்கு நீயும் நானும் தம்மைப் போன்றவர்களும் வெறும் கதவுகளைப் போலத்தான் பயன்படுகிறோம். கதவுகளால் எவை எவை மறைக்கப்பட வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவற்றை மறைக்க ஆற்றலின்றிக் கதவுகள் சிதைத்து போனால் பழைய கதவு களைக் கழற்றி எறிந்துவிட்டுப் புதிய கதவுகளை மாற்ற வேண்டியதுதானே? பெருநிதிச் செல்வருடைய எல்லா இரகசியங்களுக்கும் நான் பலமான கதவாயிருந்த காலத்தில் அவர் என்னை நன்றாகப் பேணினார்!