பக்கம்:மணி பல்லவம் 4.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

753

கடலிலேயே சாகிறேன். பூம்புகாரின் கடற்பரப்பில் எல்லாம் நான் இறந்தபின் பேயாக உலவுகிறேன். அந்தப் பாதக மனிதனுடைய கப்பல்களையெல்லாம் அறைந்து கடலில் கவிழ்க்கிறேன். அவருடைய பெரும் கடல் வாணிகத்தையே கவிழ்த்துவிடுகிறேன். அந்தக் கப்பல்களில் ஏதாவதொன்றில் எப்போதாவது அந்தப் பாதகனும் பயணம் செய்துகொண்டு வருவான் அல்லவா? அப்போது அவனை இந்த இரண்டு கைகளாலும் பிடித்து பேயறை அறைந்து கழுத்தை நெரித்து அப்படியே கடலில் தள்ளி...?”

சொல்லிக்கொண்டே வந்தவர் உணர்ச்சித் துடிப்பில் எதிரே யாருடைய கழுத்தோ தன்னுடைய பிடியில் உண்மையாகவே இருப்பதாகக் கருதிக் கொண்டு இரண்டு கைகளாலும் நெரிக்க முயன்றபடி எழுந்திருக்க முற்பட்டுக் கால் ஊன்றி நிற்க முடியாத காரணத்தால் மறுபடி பலிபீடத்திலேயே முடங்கிச் சாய்ந்து விழுந்தார். விழுந்தவருக்கு மூச்சு இரைத்தது. கண் சொருகிச் சொருகி விழித்தது. அந்த இரும்பு நெஞ்சு விம்மி விம்மித் தணிந்தது. அருவாளன் மறுபடி அவரருகே மண்டியிட்டு அமர்ந்து அந்த நெஞ்சைத் தடவிக் கொடுத் தான். அவருடைய அநுபவங்களைப் பார்த்து அவனுக்குப் பரிதாபமாக இருந்தது. பயமாகவும் இருந்தது. தனக்கே அவற்றிலிருந்து தேவையான பாடங்கள் கிடைப்பது போலவும் இருந்தது.

‘இவரைப்போல் கொடுமையாகவும் பயங்கரமாகவும் இனி ஒருவர் வாழ முடியாது. இவருக்கு இப்போது கிடைத்துக் கொண்டிருப்பது போல் கொடுமையான சாவும் இன்னொருவருக்குக் கிடைக்கக் கூடாது. கிடைக்கவும் வேண்டாம். இன்னொருவர் தாங்கிப் பொறுத்துக் கொள்ள முடியாதது இந்த விதமான சாவு’ என்று எண்ணி எண்ணி மலைத்தான் அருவாளன். இன்னும் கொஞ்சம் நெல்லிக்கனிச் சாறு கலந்து நீரை அவர் வாயில் ஊற்றும்படி தன் தோழனுக்குச் சைகை செய்தான் அருவாளன்.


ம-48

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/144&oldid=1231569" இலிருந்து மீள்விக்கப்பட்டது