பக்கம்:மணி பல்லவம் 4.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

758

மணிபல்லவம்

கடைசிக் கணத்தில், சிவந்துபோய்த் தனியாய் முகத்துக்கே புண்போல் இருந்த அந்த ஒற்றைக் கண்ணின் மேல் குறிவைத்துப் பாய்ந்தது ஒரு நரி. கண்ணின் பார்வை அவியும்போதே உயிரின் கடைசிப் பார்வையையும் முடித்துவிட விரும்புவதுபோல் அவருடைய குரல் வளையைக் கவ்வியது மற்றொரு நரி! அதற்குப் பின் அந்த முகத்தில் கண்ணே இல்லை, கண்ணிருந்தாலும் பார்ப்பதற்கு உயிருணர்ச்சி இல்லை. அவ்வளவு ஏன்? அந்த உடம்பே முழு உருவமாக இல்லை.

ருவாள மறவனும் அவனுடைய தோழனும் வன்னி மன்றத்துக்குப் போய்க் கபாலிகையாகிய பைரவியை அழைத்துக் கொண்டு காளிகோட்டத்துக்குத் திரும்பி வந்தபோது அங்கே நகைவேழம்பர் என்ற பெயரைத் தாங்கிக் கொண்டிருந்த மனித உடம்பை முழுமையாகக் காண முடியவில்லை. பலிபீடத்தின் மேலும் அதைச் சுற்றிலும் ஒரே நரிக் கூட்டமாகச் சூழ்ந்திருந்தது. அருவாளனும், அவன் தோழனும் பைரவியும் இறைச்சி நெடியிற் கூடியிருந்த அந்த நரிக் கூட்டத்தை அரும்பாடு பட்டு விரட்டிவிட்டுப் பார்த்த போதுகூட அவருடைய உடம்பில் நரிகளுக்குப் பறிகொடுத்து இழந்த பகுதிகளைத் தவிர எஞ்சியவை மட்டுமே கிடைத்தன. அப்படி இழந்து போயிருந்த பகுதிகளில் மிக முதன்மையானது அவருடைய உயிராயிருந்தது. சொல்ல முடியாத துயரமும் இரக்கமும் வந்து நெஞ்சை அடைக்க அருவாளன் உடைந்து தளர்ந்த குரலில் தன் நண்பனையும் கபாலிகையையும் பார்த்துச் சொன்னான். “மனிதர்கள் கெட்டவர்களாக இருக்கலாம். பாவிகளாகவும் பாதகர்களாவும் இருக்கலாம். எப்படி இருந்தாலும் உலகத்தில் சாவது பயங்கரமானதுதான். பொதுவாகச் சாவதே பயங்கரமானது என்றால் பயங்கரமாகவே சாவதென்பது எவ்வளவு வேதனையானது? இவர் தமது கடைசி ஆசையையும் நிறைவேற்றிக் கொள்ளாமலே செத்துப்போய் விட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/149&oldid=1190782" இலிருந்து மீள்விக்கப்பட்டது