பக்கம்:மணி பல்லவம் 4.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

624

மணிபல்லவம்

வரைந்துகொள்ளத் தொடங்கிவிட்டது. செல்வத்தையும் சுகபோக ஆடம்பரங்களையும் காட்டி அவற்றால் அவரைக் கவர முடியாது. செல்வத்தின் மதிப்பு மிகுதியானால் அதைப் புறக்கணிக்கிற மனத்தின் மதிப்பு அதைவிட அதிகமென்று நினைக்கிறவர் அவர். மதிப்பு நிறைந்த பொருளைக்கூட மதிக்காமல் நிமிர்ந்து நிற்கிற வருடைய சொந்த மதிப்பை எப்படி அளக்க முடியும்? பதுமை! அவருடைய மதிப்பை அளக்க முடியாமல் தான் அந்தப் பட்டினப் பாக்கத்துப் பெண் அவருக்கு மனம் தோற்றாள்.

“பிறருடைய தோல்வியை ஒப்புக்கொண்டு தான் பெருமிதம் அடைகிறவன் வீரன். அவரோ, ‘சுரமஞ்சரி தனக்குத் தோற்றுவிட்டாள்’ என்பதை ஒப்பி அவளுடைய தோல்வியைத் தம்முடைய வெற்றியாகக் கூடக் கொண்டாடாமல் அலட்சியம் செய்கிறார். ‘தன் தோல்வியை -- தன் மனத்தின் நெகிழ்ச்சியை அவர் அங்கிகாரம் செய்து கொள்ள வேண்டும்’ - என்பது தான் இப்போது சுரமஞ்சரியின் தவிப்பு. அவரோ நாளங்காடியில் பலப்பல அறிஞர்களின் தோல்வியை ஒப்புக்கொள்கிறார். பிறருடைய அறிவின் தோல்வியை! ஒப்புக் கொள்கிறவர் பிறருடைய அன்பின் தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்குகிறார், பதுமை!”

“விசித்திரமான உண்மையாயிருக்கிறதே?”

“உண்மை விசித்திரமானதாயில்லை! விசித்திரம்தான் உண்மையாயிருக்கிறது” என்று மூன்றாவது குரல் ஒன்று ஒலித்ததைக் கேட்டவுடன் மணிமார்பனும் அவன் மனைவி பதுமையும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார்கள். பாய் மரத்தின் மறுபுறத்திலிருந்து சிரித்தபடியே இளங்குமரன் அவர்களுக்கு முன்னால் தோன்றினான்.

அவர் அங்கே இல்லை என்று நினைத்துக் கொண்டு தான் பேசியவற்றையெல்லாம் அவரும் கேட்டிருக்கிறார் என்று தனக்கே புரிந்துவிட்ட அந்த விநாடியில் மணி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/15&oldid=1231446" இலிருந்து மீள்விக்கப்பட்டது