உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி பல்லவம் 4.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

765


கனவில் நேற்றைய அனுபவம் மட்டும் எனக்கு ஒரு புதுமை. காட்டு வழியில் ஓர் இடத்தில் நாலைந்து முரட்டு மனிதர்களாகச் சேர்ந்துகொண்டு அவரை அடித்துக் கொன்றுவிடுகிறாற் போலக் கனவு கண்டேன்.”

“கனவில்தானே அப்படி நடந்தது? உண்மையாகவே அப்படி நடந்திருந்தால்கூட நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் பதுமை ! அப்படி அடிபட்டுச் சாக வேண்டிய பெரிய கொடும்பாவிதான் அவன். ஆயினும் இதற்குள் சாகமாட்டான் அவன். சாவையே ஏமாற்றி அனுப்பிவிடக் கூடிய கொடுந்துணிவும் அவனுக்கு உண்டு. அன்று நீயும் நானும் அவன் கடலில் மிதந்து சீரழிந்ததைப் பார்த்தோம் அல்லவா ? அப்படி மி தப்பதும், நீந்துவதும்கூட அவனுக்குத் துன்பமில்லை. அவனும் அவனை வைத்து ஆளும் பெருநிதிச் செல்வரும் தங்கள் வாழ்க்கையின் பெரும் பகுதியைக் கடல் பயணத்திலும், கடல் கடந்து வாணிகம் செய்வதிலுமே கழித்தவர்கள். இந்த இரண்டு மூன்று நாட்களாய்க் கப்பல் பயணம் செய்துகொண்டு வருகிற நாமே இத்தனை யோசனை தூரம்தான் கடக்க முடிந்திருக்கிறது. ஆனால் அந்த ஒற்றைக் கண் வேங்கையோ இதற்குள் நீந்தியே பூம்புகாரின் கரைக்குள் போய்ச் சேர்ந்திருக்கும்” என்றான் மணிமார்பன்.

“போதும்! இரையாதீர்கள். அதோ இந்தக் கப்பலின் கோடியில் அவர்கள் ஏதோ ஆழ்ந்த ஈடுபாட்டுடன் தங்களுக்குள் தனியாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நாம் இரைவது, அவர்களுடைய பேச்சுக்கு இடையூறாக முடியலாமோ, என்னவோ?” என்று சொல்லிக் கொண்டே தன் மனைவி பதுமை அப்போது சுட்டிக் காண்பித்த பகுதியில் பார்த்த மணிமார்பன் பெரிதும் வியப்பு அடைந்தான்.

குளிர்ந்த காற்று வீசும் இந்த வைகறை வேளையில் இளங்குமரனும் வளநாடுடையாரும் எதைப்பற்றி இவ்வளவு ஈடுபட்டுத் தனிமையில் பேசிக்கொண்டிருக்க முடியும் என்று அவனுக்கே புரிந்துகொள்ள முடியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/156&oldid=1231582" இலிருந்து மீள்விக்கப்பட்டது