பக்கம்:மணி பல்லவம் 4.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

766

மணிபல்லவம்

வீரசோழிய வளநாடுடையாரின் முகபாவத்திலிருந்து அவர் இளங்குமரனிடம் ஏதோ கடுமையான விஷயத்தை வற்புறுத்திச் சொல்லிக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது. இளங்குமரனின் முகமோ மலர்ச்சி குன்றாமலே அவர் கூறுவனவற்றைத் தாங்கிக் கொண்டிருக்கும் சாயலைக் காட்டியது. இடையிடையே அவர் கோபமாகக் கூறுவனவற்றைத் தாங்கிக் கொண்டிருக்கும் சாயலைக் காட்டியது. இடையிடையே அவர் கோபமாகக் கூறுவனவற்றைக் கேட்டு அவன் புன்முறுவல் பூப்பதையும் மணிமார்பன் கவனித்தான். தன் ஆவலை அவனால் அடக்கிக் கொள்ள முடியவில்லை. “பதுமை நீ இங்கேயே இரு” என்று கூறிவிட்டு வளநாடுடையாரும் இளங்குமரனும் பேசிக் கொண்டிருந்த பகுதிக்கு மிக அருகில் ஒரு பாய் மரத்தின் மறைவில் போய்த் தனக்கு அவர்கள் தெரியும் படியாகவும் தன்னை அவர்கள் பார்த்துவிட முடியாதபடியும் நின்று கொண்டான் மணிமார்பன். அவர்கள் இருவரும் பேசிக் கொள்வதை அவன் அங்கிருந்து நன்றாகக் கேட்க முடிந்தது. வளநாடுடையார் ஆத்திரத்தோடு இளங்குமரனைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

“நீ இவ்வளவு பெரிய கோழையாக மாறியிருப்பாய் என்று நான் கனவில்கூட நினைத்ததில்லை தம்பீ! நீ சென்று கொண்டிருக்கிற கப்பலையே தீக்கிரையாக்கி அழித்துவிடும் திட்டத்தோடு வந்து கொடியவர்கள் தீப்பந்தங்களை வீசும்போது ‘நான் அருளாளன் என்னிடம் இதற்கு எதிர்ப்பு இல்லை’ என்று நீ எனக்கு மறுமொழி கூறுகிறாய். நடந்து மறந்துபோன நிகழ்ச்சியை மறுபடியும் நினைவூட்டிப் பேசுகிறேனே என்று நீ என்மேல் வருத்தப்பட்டுக் கொள்ளக்கூடாது. எதிர்ப்புக்கு முன்னால் துறவியாக நின்றுவிடுவது கருணை மறம் என்று நீ எண்ணிக் கொண்டிருக்கிறாய் போல் தோன்றுகிறது. ஏலாதவர்களிடமும், இயலாதவர்களிடமும் அன்பு செலுத்திக் கருணை காட்டுவதுதான் கருணை மறம். கொடியவர்களை எதிர்க்க வேண்டிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/157&oldid=1231583" இலிருந்து மீள்விக்கப்பட்டது