மார்பனுடைய மனைவி சொல்லிலடங்காத அளவு நாணமும், கூச்சமும், அடைந்தாள். அவளுடைய கண்கள் இளங்குமரனை நேருக்கு நேர் எதிரே பார்ப்பதற்குக் கூசின. மலையுச்சியைக் கடந்து மேலே பறந்துவிடலாம் என்று முயன்ற சிட்டுக்குருவி அந்த மலையுச்சியின் உயரம் மேலும் மேலும் உயர்ந்து கொண்டு போவதைக் கண்டு அயர்ந்தாற் போலிருந்தது பதுமையின் நிலை.
“சகோதரீ! உங்கள் பேருக்கு ஏற்றாற்போல் நீங்கள் பேசாமலே இருக்கிறீர்களே என்று நேற்றுவரை சிந்தித்துக் கொண்டிருந்தேன். இன்று வட்டியும் முதலுமாகச் சேர்த்து உங்கள் கணவரிடம் பேசித் தீர்த்து விட்டீர்கள்” என்று இளங்குமரன் முதன் முதலாக மணிமார்பனுடைய மனைவியை நோக்கிப் பேசினான். அவள் பதில் சொல்லவில்லை. அந்தக் குரலின் ஒலியில் பயந்து தயங்கி நின்றாள்.
“பேர்தான் பதுமை! இந்தச் சொல்லரசியின் வார்த்தைகளுக்கு இவள் கணவனாகிய நானே அவ்வப்போது பதில் கூறத் திணறிப் போகிறேன் ஐயா” என்று மணிமார்பன்தான் சிரித்தவாறே இளங்குமரனுக்குப் பதில் கூறினான். இதைக் கேட்டு இளங்குமரன் புன்னகை புரிந்தான்.
நான்... ஏதாவது... தப்பாகப் பேசியிருத்தால்... பொறுத்தருளி என்னை மன்னிக்க வேண்டும்...” என்று தயங்கித் தயங்கி ஒவ்வொரு வார்த்தையாகக் குனிந்து தலை நிமிராமலே சொன்னாள் பதுமை.
“தப்பாகப் பேசியிருப்போமோ என்று இப்போது நீங்கள் நினைத்துப் பயப்படுவதுதான் பெரிய தப்பு சகோதரீ! உங்களுடைய சில கேள்விகளுக்கு உங்கள் கணவரே பதில் கூறத் திணறியதையும் நான் கவனித்தேன். நான் முல்லையிடம் கப்பலேறு முன்பு சொல்லி விடை பெற்றுக்கொள்ளாதது மூன்று பேருடைய மனங்களைத் துன்புறுத்தியிருக்கிறதென்று எனக்கே இப்போது தெரிகிறது. முல்லை துன்புற்றதைத் தவிர நீங்கள் வேறு இதற்காக மனம் வருந்தியிருக்கிறீர்கள் ம-40