நா. பார்த்தசாரதி
771
உயிர்களையும் சமமாகப் பாவித்துக் கொண்டு எல்லா உயிர்களுக்கும் எப்போதும் எங்கும் மகிழ்ச்சி ஏற்பட வேண்டும் என்று நினைப்பதுதான். அவ்வாறு நினைக்கும் வலிமைதான் இப்போது என்னிடம் மீதமிருக்கிறது. மற்ற வலிமைகளை எல்லாம் ‘இவற்றை இனி இழந்துவிடத் தான் வேண்டும்’ என்று திட்டமிட்டுக் கொண்டு இழந்தாற்போல நானே படிப்படியாய் இழந்துவிட்டேன். இப்படி அவற்றையெல்லாம் இழந்து விட்டு வெறும் கருணை மறவனாக நிற்கும் என்னிடம் வந்து, ‘மறுபடி உடல் வலிமையைக் காட்டிப் போரிட வேண்டிய காலம் உன்வாழ்வில் வரலாம்'-என்று நீங்கள் கூறிய வார்த்தைகளே எனக்குச் சிரிப்பு மூட்டின.”
இவ்வாறு இளங்குமரன் வளநாடுடையாருக்கு மறுமொழி கூறிக்கொண்டிருந்தபோது கப்பல் தலைவனுடைய எச்சரிக்கைக் குரல் குறுக்கிட்டுப் பெரிதாக ஒலித்தது. அலைகளின் நெருக்கமும் குமுறுலும் அதிகமாயிருப்பதனால் எல்லாரும் கீழ்த்தளத்துக்கு வந்து பாதுகாப்பாயிருக்க வேண்டுமென்று கப்பல் தலைவன் உரத்த குரலில் கட்டளையிட்டான். குடை சுற்றி ஆடுவதுபோல் மரக்கலம் இரண்டு பக்கமும் சாய்ந்து சாய்ந்து நிமிரத் தொடங்கியிருந்தது. கப்பல் தலைவன் அவர்களருகே வந்து மேலும் விளக்கமாகக் கூறினான்;-
“ஐயா! இந்த இடத்திலிருந்து இன்னும் சிறிது தொலைவுவரை இது ஒரு பெரிய நீர்ச்சந்தி, நாகநாட்டுப் பெருந்தீவின் ஆட்சிக்கு அடங்கிய ஏழு சிறு தீவுகளை ஊடறுத்துக் கொண்டு கடல் ஒன்று சேருகிற இடம் இது. ஏழாற்றுப் பிரிவு என்றும் ஏமாற்றுக் கடவு என்றும் சொல்லிச் சொல்லிக் கப்பல்காரர்கள் பயந்து கொண்டே பயணம் செய்து கடக்க வேண்டிய பகுதியில் இப்போது நாமும் நுழைந்துவிட்டோம். மிகவும் கவனமாக இந்த ஏழாற்றுத் துறையைக் கடந்துவிட்டால் நாக நாட்டுப் பெருந்தீவகத்தின் நுனியை அடையலாம். பெருந்தீவகத்தின் நுனியில் மேற்குக் கரையைச் சார்ந்த சங்குவேலி என்னும் அழகிய துறைமுகத்தில் இறங்கி