பக்கம்:மணி பல்லவம் 4.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

776

மணிபல்லவம்


“இவ்வளவு அழகான கடலும் அதனிடையே இத்துணை வனப்பு வாய்ந்த தீவும் தோன்றக் காரணமாயிருந்த முழுமுதற் பேரழகு எதுவோ அதை என் நெஞ்சும் உணர்வுகளும் இந்தக் கணமே வணங்குகின்றன” என்று தூய்மையான அழகுணர்ச்சியில் தோய்ந்து நின்றான் அவன்.

தொடுவானமாகத் தொலைவில் தெரிந்த கடலும் தீயும் ஆகாயமும் சந்திக்கிற கோட்டில் மயில் கழுத்து நிறம்போலத் தெரிந்த எழுதாத வண்ணத்தை மூடிய கண்களுடனேயே தன் நினைவுக்குக் கொணர்ந்து தந்துகொண்டு எண்ணத்தில் ஆழ்ந்தான் அவன்.

அவனிடம் சற்று முன் பேச்சில் ஏற்பட்ட பிணக்கு காரணமாக விலகியிருந்த வளநாடுடையார் இப்போது மீண்டும் அவன் அருகே வந்தார். அவனோடு ஏதோ பேசுவதற்கு நிற்கிறவர்போல் தயங்கிக் காத்து நின்றார். இளங்குமரன் கண்கள் திறந்து பார்த்ததும் அவர் அங்கு வந்து நிற்பதையும் நிற்கும் நோக்கத்தையும் புரிந்து கொண்டான்.

“தம்பீ! இப்போதாவது என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளாமல் நான் சொல்வதைக் கவனமாகக் கேள். வீரம் என்பது உடம்பின் வலிமையாகிய ஆற்றலா, மனத்தின் வலிமையாகிய கருணையா என்பதைப் பற்றி இப்போது நான் உன்னிடம் வாதிட வரவில்லை.

அதைப்பற்றி நாம் இதுவரை பேசியவற்றைக்கூட நீ இந்தக் கணத்திலேயே மறந்துவிடலாம். இப்போது நான் சொல்லப் போவது இங்கே பயணம் செய்து வந்ததன் அவசியத்தைப்பற்றியே ஆகும். பூம்புகார்த் துறையிலிருந்து நாம் புறப்படுவதற்கு முன் நீலநாக மறவர் உன்னிடம் கூறியவற்றை இப்போது மீண்டும் நினைவூட்டிக் கொள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/167&oldid=1231594" இலிருந்து மீள்விக்கப்பட்டது