நா. பார்த்தசாரதி
779
உடனே அவனிடம் சொல்லிவிடப் பறந்தது. அப்படி உடனே சொல்லிவிடுவதும் பொருத்தமானதாக அமையாதென்று மெதுவாக அந்த விநாடியில் எப்படித் தொடங்க வேண்டுமென்று தோன்றியதோ அப்படியே தொடங்கிச் சொல்லலானார் அவர்:-
“தம்பீ! நீ பூம்புகாரிலிருந்து திருநாங்கூருக்குப் புறப்படுவதற்கு முன்பு நிகழ்ந்த பழைய இந்திர விழாவை உனக்கு நினைவிருக்கிறதல்லவா? அந்த இந்திர விழாவிற்கு முதல் நாள் பின்னிரவில்தான் சம்பாபதி வனத்தில் அடிபட்டுக் கிடந்த அருட்செல்வ முனிவரை நீ எங்கள் வீட்டுக்குத் தூக்கிவந்து தங்கச் செய்து காப்பாற்றினாய். அன்றைக்கு ஒருநாள் காலையில் உன்னை என் மகள் முல்லையோடு பூத சதுக்கத்துக்குத் துணையாக அனுப்பிய பின்பு புறவீதியில் என் இல்லத்தில் நானும் உன்னை வளர்த்து ஆளாக்கிய அருட்செல்வ முனிவரும் தனியாக இருந்தோம். அப்படி தனியாயிருந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு அன்று நான் அவரிடம் அந்தரங்கமாக ஒரு கேள்வி கேட்டேன். அது வேறு எந்தக் கேள்வியும்ல்லை. உன்னைப் பற்றிய கேள்விதான்.
துறவிகளுக்கு ஒளிவு மறைவு கூடாதென்பார்கள். நீங்களோ மிகமிகப் பெரிய செய்திகளையெல்லாம் ஒளித்து மறைத்துக் காப்பாற்றி வருகிறீர்கள், இன்று வரை நீங்கள் வளர்த்து ஆளாக்கிய இந்தப் பிள்ளை இளங்குமரனுடைய பிறப்பு வளர்ப்பைப்பற்றி என்னிடம் ஒன்றும் சொல்லாமல் ஏமாற்றிக் கொண்டே வருகிறீர்களே ? - என்று கேட்டேன்.
‘என் இதயத்துக்குள்ளேயே நான் இப்போது இரண்டாவது முறையாக எண்ணிப் பார்ப்பதற்குக்கூட பயப்படுகிற செய்திகளை உங்களிடம் எப்படிச் சொல்ல முடியும்!’ என்று அருட்செல்வ முனிவர் அன்று எனக்கு மறுமொழி கூறினார்.