பக்கம்:மணி பல்லவம் 4.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முகத்தின் பயங்கரம் தெரிந்தது. ஒரே கண் மட்டும் இருந்ததனாலோ அல்லது ஒரு கண் இல்லாமையினாலோ படகிலிருந்தவர்களின் தோற்றத்தில் பளீரென்று பார்வையில் பதிந்த முகம் நகைவேழம்பருடையதாகத்தான் இருந்தது. அவரை இளங்குமரனும் பார்த்தான்.

“ஐயா! இவன் நல்ல எண்ணத்தோடு வரவில்லை... இந்தப் பாவி பின் தொடர்வதில் ஏதோ சூழ்ச்சி யிருக்கிறது” என்று பயத்தில் சொற்களைக் குழறினான் மணிமார்பன். தன்னுடைய வாழ்வின் எங்கோ ஒரு மூலையில் பழைய நாட்கள் சிலவற்றில் அந்த ஒற்றைக் கண் கொலைகாரனிடம் அகப்பட்டுக் கொண்டு தான் பட்ட வேதனைகள் இந்த விநாடியில் மணிமார்பனுக்கு நினைவு வந்துவிட்டன போலும்.

“பயப்படாதே! படகில் வருகிறவன் எவனாக இருந்தாலும் அவன் உயிருக்குத்தான் ஆபத்து. நாம் மூன்று பேர்--கப்பல் ஊழியர்கள் --எல்லாருமாகச் சேர்ந்தால் அந்தப் படகைப் பொடிப் பொடியாகச் செய்து கடலில் கரைத்துவிடலாம் அப்பனே?” என்று சொல்லியபடி கையில் வேலை எடுத்துக் குறி பார்க்கத் தொடங்கிவிட்டார் வளநாடுடையார். மணிமார்பனும் ஒரு வேலை எடுத்துக்கொண்டான். இளங்குமரன் மட்டும் கைகட்டி நின்றவாறே முகத்தில் மெல்லிய நகை மலர இருந்தான்.

‘"என்ன ஐயா நிற்கிறீர்கள்?... நீங்களும்....?” என்று சொற்களைத் தொடங்கிய மணிமார்பன் இளங்குமரனுடைய முகபாவத்தை நோக்கிவிட்டுப் பேச்சை நிறுத்திக்கொண்டுவிட்டான்.

“மணிமார்பா! இந்த விநாடிகள் தான் எனக்கு மெய்யான சோதனை. “நான் அருளாளனாக இருப்பதா? அருள் என்ற விரிந்த எல்லையிலிருந்து என்னைக் குறைத்துக்கொண்டு அன்புடையவர்களுக்கு அன்பும் விரோதிகளுக்கு விரோதமும் காட்டுகிற வெறும் மனிதனாகக் கீழே இறங்கிவிடுவதா? என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் நான்” என்றான் இளங்குமரன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/19&oldid=1231450" இலிருந்து மீள்விக்கப்பட்டது