உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி பல்லவம் 4.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
2. கப்பலில் வந்த கற்பூரம்

மணிபல்லவ யாத்திரைக்காகத் திட்டமிட்டுக் கொண்டு இளங்குமரனும் வளநாடுடையாரும் பூம்புகார்த் துறை முகத்தில் கப்பல் ஏறுவதற்கு வந்திருந்த அதே காலை நேரத்தில் பெருநிதிச் செல்வரும் நகைவேழம்பரும் துறை முகத்தில் மற்றொரு பகுதியில் வந்து நின்று நங்கூரம் பாய்ச்சிக்கொண்டு வேறொரு கப்பலிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தார்கள் என்பதை எவரும் கவனிக்கவில்லை.

பொருள்களை ஏற்றிவரும் கப்பல்கள் பண்டக சாலைகளை ஒட்டிய பகுதியில் நங்கூரம் பாய்ச்சப்படுவது வழக்கம். ஆயினும் பண்டக சாலைகளை ஒட்டித் துறை கொள்ளும் கப்பல்கள் மிகவும் பெரியவைகளாக இருந்தால் அவற்றின் மேல் தளத்தில் நின்று கொண்டிருப்பவர்களால் பூம்புகார்த் துறைமுகத்தின் எல்லாப் பகுதிகளையும் நன்றாகப் பார்க்க முடியும். அப்போது வந்த கப்பல் மிகவும் பெரியது. பச்சைக் கற்பூரம், குங்குமம், பனி நீர் முதலிய நறுமணப் பொருள்களை ஏற்றிக்கொண்டு சீன தேசத்திலிருந்து பல மாதக் கணக்கில் பயணம் செய்து வந்த மிகப் பெரிய மரக்கலம் அது. சீன தேசத்திலிருந்து வந்த கப்பலில் நகைவேழம்பரும் பெருநிதிச் செல்வரும் எப்படிப் போய்ச் சேர்ந்தனர் என்பதை இப்போது கவனிக்கலாம்.

அந்த ஆண்டின் இந்திர விழாவில் சமயவாதம் புரிந்து வெற்றிமேல் வெற்றியாகப் புகழ் பெற்றுக் கொண்டிருந்த இளங்குமரனைத் தன்னுடைய மகளைக் கருவியாகப் பயன்படுத்தி பெருநிதிச்செல்வர் கொல்ல முயன்றதும், அந்த முயற்சியும் தோற்றபின் மகள் சுரமஞ்சரியை அவள் தோழியோடு மாடத்திலேயே சிறைவைத்ததும் பரம இரகசியமாக நடந்த சூழ்ச்சிகள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/20&oldid=1190486" இலிருந்து மீள்விக்கப்பட்டது