630
மணிபல்லவம்
சுரமஞ்சரியை அவளது மாடத்திலிருந்து வெளியேற முடியாமல் சிறைப்படுத்திய இரண்டு சந்தர்ப்பங்களிலும் தான் அவளைச் சிறைப்படுத்தியிருப்பதாக மற்றவர்கள் அநுமானம் செய்யும் இடமில்லாதபடி சாமர்த்தியமாக அதைச் செய்திருந்தார் அவர். தன்னையும் நகைவேழம்பரையும் தவிர மற்றவர்களுக்கு உண்மைக் காரணத்தைத் தெரியவிடக்கூடாது என்பதில் அவர் மிக உறுதியாக இருந்தார். சுரமஞ்சரியின் தாயார், சகோதரி, பெருமாளிகைப் பெண்கள் ஆகியோர்களிடம் எல்லாம் சுரமஞ்சரியின் ஜாதகப்படி கிரகநிலை சரியில்லாத சில காலங்களில் அவள் எங்கும் வெளியேறிச் செல்லாமல் தன் மாடத்திலேயே விரதமிருந்து பரிகாரங்கள் செய்ய வேண்டுமென்று வருவதறிந்து கூறுவதில் வல்ல பூம்புகார்க் கணிகள் கூறியிருப்பதாகவும் அதன்படி அவளைத் தனிமையில் இருக்க ஏற்பாடு செய்திருப்பதாகவும், வேறு எவரும் அவளைச் சந்திக்கலாகாதென்றும் கூறி நம்பச் செய்திருந்தார் பெருநிதிச் செல்வர். பெருமாளிகைப் பெண்களும், பிறரும் நம்பும் விதத்தில் அவருக்கு இந்த அற்புதமான பொய்யைச் சொல்லிக் கொடுத்தவர் நகைவேழம்பர்தான்.
இந்திர விழாவில் நாளங்காடியின் பொது இடத்தில் சுரமஞ்சரி தான் அணிந்துகொண்டிருந்த அணிகலன் களையெல்லாம் கழற்றி எறிந்துவிட்டு ‘இந்தப் பல்லக்கு நரகத்துக்குப் போகும் வாகனம்! நான் இதில் ஏறி வரமாட்டேன்’ - என்று அடம்பிடித்த தினத்தில்தான் ‘தன்னுடைய குடும்ப இரகசியங்கள் அந்த நாளங்காடி நாற்சந்தியில் சிதறிவிடுமோ?’ - என்று முதன் முதலாக அவர் அஞ்சினார். அதே நாளில் நகைவேழம்பர் வேறு ஏதோ ஒரு கலக்கத்தைப் பிறப்பிப்பதற்குக் காரணமான மெளனத்தோடு அவரிடம் வன்மமாயிருந்தார். தன் பெண் சுரமஞ்சரி அன்று இருந்த நிலையைக் கண்டு அவளிடம் அவருக்கே பயமாகிவிட்டது. இருளில் மாடத்திலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டு விடுவாளோ என்றுகூட அன்றைக்கு அவளைப் பற்றி பயந்தார் பெருநிதிச் செல்வர். அவள் அப்படி ஏதேனும்