உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி பல்லவம் 4.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

632

மணிபல்லவம்

வஞ்சகமாகச் சிரித்தார் பெருநிதிச் செல்வர். இதைக் கேட்டதும் நகைவேழம்பருக்குச் சற்றே பயம் பிறந்தது, உடலில் மெல்ல நடுக்கம் கண்டது.

“மன்னிக்க வேண்டும்! அப்போது நான் மிகவும் கோபமாயிருந்தேன். அது என்னை நிதானமிழக்கும்படிச் செய்துவிட்டது.”

“அதைப் பற்றிக் கவலையில்லை! நீர் நிதானத்தை இழந்துவிட்ட அதே நேரத்தில் உம்மால் இழக்கப்பட்ட நிதானமும் சேர்ந்து எனக்கு வந்துவிட்டது. ஒரே சமயத்தில் இரண்டு பேருமே நிதானம் இழந்திருந்தால்தான் கெடுதல்!... வாருங்கள். வேறு முக்கியமான காரியத்துக்காக இப்போது நமக்கு இன்னும் நிறைய நிதானம் தேவைப்படுகிறது நகைவேழம்பரே!”

சோறிட்டு வளர்ப்பவனுக்குப் பின்னால் வால் குழைத்துச் செல்லும் நாய்போல் தலைகுனிந்தபடி, பெருநிதிச் செல்வரைப் பின்பற்றி நடந்தார் நகைவேழம்பர். இருவரும் பெருமாளிகைத் தோட்டத்தில் தனிமையானதோர் இடத்தை அடைந்ததும் பெருநிதிச் செல்வர் பேசலானார்:--

“நம்முடைய பண்டசாலைக்கு இன்றைக்கு நான்கு நாட்களுக்கு முன்பே வந்து சேர்ந்திருக்க வேண்டிய கப்பல் ஒன்று இன்றுவரை வந்து சேரவில்லை. நீரும் அதை மறந்துவிட்டீர். பச்சைக் கற்பூரமும் குங்குமமும், பனிநீரும் ஏற்றி வருவதற்காகச் சீனத்து வணிகன் ஒருவனிடம் பல மாதங்களுக்கு முன்னால் ஆயிரம் பொற் கழஞ்சுகள் கொடுத்து ஓலை மாற்றிக்கொண்டோமே; அதை மறந்துவிட்டீர்களா? இந்த ஆண்டு இந்திரவிழாவின் முதற் கிழமைக்குள் கப்பல் இங்கு வந்து சேருமென்று அந்த வணிகன் வாக்குக் கொடுத்தான். இன்றுவரை அந்தக் கப்பலைப் பற்றி ஒரு செய்தியும் தெரியவில்லை...

“அந்தச் சீனத்து வணிகன் நம்மிடம் தவறு செய்ய மாட்டான்! இன்று அல்லது நாளைக்குக் கற்பூரக் கப்பல் துறைமுகம் வந்து சேர்ந்துவிடும்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/23&oldid=1231454" இலிருந்து மீள்விக்கப்பட்டது