634
மணிபல்லவம்
கற்பூரக் கப்பலிலேயே ஏறிக்கொண்டு பூம்புகாருக்குத் திரும்பினார்கள். அவர்கள் பூம்புகார்த் துறைமுகத்துக்குத் திரும்பிய அதே தினத்தின் காலையில் தான் இளங் குமரனும் மணிபல்லவத்துக்குப் புறப்பட்டுக் கொண் டிருந்தான்.
பண்டசாலைக்கு எதிரே துறை கொண்ட சீனத்துக் கப்பலின் மேல்தளத்திலிருந்து முதலில் இளங்குமரனைப் பார்த்தவர் நகைவேழம்பர்தான். அவருடைய ஒற்றைக் கண்ணில் தென்பட்டபோது இளங்குமரன் நீலநாகரை வணங்கி விடைபெற்றுக் கொண்டிருந்தான்.
“நான் ஒன்றைத் தேடிக்கொண்டு வந்தால் தேடி வராத வேறு காரியங்களும் அதே வழியில் எளிதாக வந்து மாட்டிக்கொள்கின்றன ஐயா! அதோபாருங்கள்...” என்று கூறிப் பெருநிதிச் செல்வருக்கு அந்தக் காட்சியைக் காட்டினார் நகைவேழம்பர்.
“என்னுடைய இரண்டு கண்கள் பார்க்கத் தவறி விடுவதைக் கூட உம்முடைய ஒரு கண்ணால் நீர் சில சமயங்களில் பார்த்து விடுகிறீர்” -- என்று அதைக் கண்டுகொண்டே நகைவேழம்பருக்குப் பாராட்டு வழங்கினார் பெருநிதிச் செல்வர். இவர்கள் இருவரும் இவ்வாறு பார்த்துப் பேசிக்கொண்டிருந்தபோதே அந்தக் கப்பலின் ஊழியர்கள் பெரிய படகு ஒன்றில் பண்ட சாலைக்குக் கொண்டு போவதற்காகக் கற்பூரத்தை இறக்கிக் குவித்துக் கொண்டிருந்தார்கள். இடமகன்று குழிந்த படகின் உட்புறம் ஓலைப் பாய்களை விரித்துக் குவிக்கப்பட்ட கற்பூரம் அந்தப் பகுதியெல்லாம் மணத்தைப் பரப்பியது. சீனத்துக் கப்பலில் இருந்து பணியாளர்கள் கூடை கூடையாக எடுத்துக் கொடுத்த கற்பூரத்தைத் துறைமுகத்துப் பண்டசாலை ஊழியர்கள் நால்வர் படகில் இருந்து வாங்கிக் குவித்துக் கொண்டிருந்த அந்த நிலையில் துறையின் மற்றொரு பகுதியில் இளங்குமரன் முதலியவர்களை ஏற்றிக் கொண்ட கப்பல் புறப்பட்டு விட்டதைக் கண்டு விட்ட பெருநிதிச் செல்வர் நகைவேழம்பரிடம் ஏதோ சைகை செய்தார். உடனே நகைவேழம்பர் பரபரப்போடு கீழிறங்கித் தங்கள்