பக்கம்:மணி பல்லவம் 4.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

636

மணிபல்லவம்

செலுத்தவில்லை என்று அவன் மேல் அளவற்ற கோபத் தோடிருந்த நகைவேழம்பர் இப்போது அவன் தன்னிடம் பேச வந்ததையே விரும்பாதவராக, “வாயை மூடு! உன் பேச்சு யாருக்கு வேண்டும்? காரியத்தைக் கவனி...” என்று இரைந்து அவனை அடக்கிவிட்டார். அவன் தான் கூற வந்த மிக முக்கியமான விஷயத்தைச் சொல்ல முடியாமல் அடங்கிப்போய் விட்டான். படகின் பாதுகாப்பானதொரு பகுதியில் வைத்துத் தீக்கடைக் கோல்களைக் கடைந்து விரைவாய்ப் பந்தங்களைக் கொளுத்தவும் தொடங்கி விட்டார்கள் ஊழியர்கள். கப்பலில் இருந்தவர்கள் தங்களை நோக்கி வேலை ஓங்குவதையும் நகைவேழம்பர் கவனித்தார். உடனே தீப்பந்தங்களை எறியத் தொடங்கும்படி உத்தரவு பிறந்தது. கப்பலை நோக்கிப் பந்தங்கள் பாய்ந்து பறந்தன. அப்போதிருந்த ஆத்திரத்தில் நகைவேழம்பர் முன் விளைவு, பின் விளைவைச் சிந்திக்கிற நிதானத்தை முற்றிலும் இழந்திருந்தார். ஏறக்குறைய அடிமைகளுக்குச் சமமான அந்த ஊழியர்களும் அவர் கட்டளையிட்டதைச் செயலாக்க முனைந்தார்களே ஒழிய அந்த கட்டளைக்குக் கீழ்ப்பணிந்து செயல்படுவதால் வரும் விளைவுகளை நினைக்கவில்லை. கப்பலின் மற்றொரு மூலையில் கற்பூரம் குவிக்கப்பட்டிருப்பதை படகோட்டி ஒருவனைத் தவிர மற்றவர்கள் மறந்தேவிட்டனர். அடிமைகளாயிருப்பவர்களுக்கு ‘நாம் அடிமைப்பட்டிருக் கிறோம்’ என்று நினைப்பதற்கே நேரமும் சுதந்திரமும் இல்லாதபோது மற்ற விளைவுகளை நினைக்க நேரம் ஏது? அந்தக் கூட்டத்தில் அடிமையல்லாதவனாகிய படகோட்டி மட்டும் ஒரு கணம் பின்விளைவை நினைத்து நகைவேழம்பரை எச்சரிப்பதற்கு வாய் திறந்தான். அவருடைய கூக்குரலையும் பயமுறுத்தலையும் கண்டு ‘நமக்கு ஏன் வம்பு?” -- என்று இறுதியில் அவனும் அடங்கிப்போய் விட்டான். இளங் குமரனை ஒடுக்கி அடக்கி இல்லாமற் செய்துவிடும் முயற்சியில் இரண்டு மூன்று முறை தாம் தோற்றுப் போய்ப் பெருநிதிச் செல்வருக்கு முன் தலைகுனிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/27&oldid=1231458" இலிருந்து மீள்விக்கப்பட்டது