நா. பார்த்தசாரதி
645
போன்ற புலவர்கள் தங்கள் நூல்களில் தெரிவித்திருப்பதை நினைத்துக் கொண்டாள் சுரமஞ்சரி. இந்தச் சிந்தனைப் புதிர்களுக்கு மேல் மற்றொரு புதிரும் மறுநாள் காலை அந்த மாளிகையில் அவளுக்காகக் காத்திருந்தது. தந்தையாரையும் நகைவேழம்பரையும் மறு நாள் காலையிலிருந்து அங்கே காணவில்லை. அவர்களை வசந்தமாலையோ தானோ நேரில் பார்க்க முடியாவிட்டாலும் மாளிகையில் ஏதாவதொரு பகுதியிலிருந்து அவர்கள் இருவரும் பேசுகிற குரலையாவது சுரமஞ்சரி கேட்பாள். மறுநாள் விடிந்ததிலிருந்து மாளிகையின் எந்தப் பகுதியிலும் தனியாகவோ, சேர்ந்தோ நகைவேழம்பர் - தந்தையார் இருவருடைய குரலும் கேட்கவில்லை. அந்த இரண்டு குரலும் கேட்காததனால் மாளிகையே மாறிப்போய்த் திடீரென்று புதுமை பெற்றுவிட்டாற் போலிருந்தது. முதல் நாள் இரவில் கண்டதையும் மறுநாள் காலையில் அவர்கள் இருவரும் காணாமற் போனதையும் சேர்த்து எண்ணி இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் ஏதேனும் காரண காரியத் தொடர்பு இருக்குமோ என்று நெஞ்சம் குழம்பினாள் சுரமஞ்சரி. நூலில் சிக்கல் விழுவதுபோல் ஒரு புதிரை அவிழ்க்கும் முயற்சியில் இன்னொரு புதிர் தோன்றிக் குழப்பத்தை மிகுதியாக்கியதே. ஒழியத் தெளிவு பிறக்கவில்லை; புதிரும் விளங்கவில்லை.
“வசந்தமாலை! பார்த்தாயோ, இல்லையோ? இந்த மாளிகையின் இன்றைய நாடகத்தில் காட்சி மாறி விட்டது. நடிப்பும் மாறிவிட்டது. அவர்களுடைய பேச்சுக் குரலே கேட்கவில்லை. இன்னும் என்னென்ன கெடுதல்களுக்கு ஏற்பாடு நடக்கிறதோ, தெரியவில்லை” ... என்று தன் தோழியிடம் சொன்னாள் சுரமஞ்சரி. யாரிடமாவது ஒரு நோக்கமுமின்றிப் பேச்சுக் கொடுத்தாலும்கூட அப்போதுள்ள சூழ்நிலையில் அதுவே தன் மனதுக்கு ஆறுதலாயிருக்குமென்று அவள் எண்ணினாள்.
“இன்னும் சில நாட்களுக்கு இந்தப் பெருமாளிகையில் இரைந்து கேட்கிற குரல்கள் எவையும் ஒலிக்காது. அம்மா உங்கள் தந்தையாரும் நகைவேழம்-